தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருச்செந்தூரில் கடல்சீற்றம் காரணமாக எழுந்த ராட்சத அலைகள் கரையில் மோதியதால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் உள்ள பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா, பண்டிகை, சுபமுகூர்த்த நாள் மற்றும் விடுமுறை தினங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முழுவதும் பலத்த மழை பெய்தது. அப்போது திருச்செந்தூர் நகர் பகுதியில் உள்ள சாலைகளான இரும்பு ஆர்ச், வடக்குத் வீதி, காமராஜர் சாலை, சன்னதி தெரு, டி.பி.ரோடு, ரதவீதிகள், சபாபதி புரம் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் ஆறாக ஓடியது.
மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் நேற்று கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கரைப்பகுதியை பலமாக மோதின. இதனால் கடற்கரையில் சுமார் 3 அடி தூரத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கடலின் உள்ளே இருந்து அலையுடன் சுழற்றிக்கொண்டு வந்த கடற்பாசிகள் குவியல் குவியலாக கரையோரம் ஒதுங்கின. இதனால் கடற்கரையோரத்தில் பச்சை பசேலென காட்சியளித்தது. எனினும் நேற்று காலையில் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடினர். பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.


