பெரியதாழையில் இருந்து திசையன்விளை சென்ற அரசு நகரப் பேருந்து திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அரசுப் போக்குவரத்து பணிமனையிலிருந்து திசையன் விளையில் இருந்து செட்டியார் பண்ணை, மருதநாச்சிவிளை, புத்தன்தருவை, பனைவிளை,கரிசல், அதிசயபுரம், செட்டிவிளை வழியாக பெரியதாழைக்கு அரசு நகரப் பேருந்து தடம் எண்-25 இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்தால் அப்பகுதி கிராம மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த பேருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இந்த பேருந்தை நம்பியுள்ள கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். .
இந்த பேருந்தை மீண்டும் இயக்கிட வலியுறுத்தியும் இயக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து சாத்தான்குளம் ஒன்றிய பாஜக ஊடக பிரிவு தலைவர் வசந்தகுமார் கூறுகையில், “கரோனா தளர்வுகளையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் கிராமப்புற மக்கள் மாணவர்கள் திசையன்விளை பகுதிக்கு சென்று திரும்ப மிகவும் அவதியடையும் நிலை உருவாகியுள்ளது. ஆதலால் அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் இதனைக் கவனித்து நிறுத்தப்பட்ட திசையன்விளை – பெரியதாழை அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


