தூத்துக்குடியில் பலத்த காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை அவ்வப்போது பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மழை பெய்யாவிட்டாலும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மேலும் தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 4 நாட்களில் தொடங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதே போன்று, இன்று (புதன்கிழமை) முதல் 31-ந் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதன்படி தூத்துக்குடியில் தற்போது 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று காலை முதல் பலத்த காற்று வீசியது. இந்த காற்று காரணமாக ரோடுகளில் உள்ள புழுதியை வாரி இறைத்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் இன்றி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


