இன்றைய நெல்லை டைம்ஸ் பத்திரிக்கையில் நான் எழுதிய தொடர். படித்து கருத்தை தெரிவியுங்கள் நண்பர்களே. வாய்ப்பு தந்த நண்பர் தம்பான் மற்றும் நெல்லை டைம்ஸ் ஆசிரியர் குழுவுக்கு மிக்க நன்றி- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
தாமிரபரணி கரையில் வெளி உலகுக்கு தெரியாமல் அற்புதமாக தண்ணீர் கொட்டும் அற்புத அருவி, பெருவிரல் பட்டாலே ஆளை விழுங்கும் அகத்தியர் அருவி, அதாள பாதாளத்தில் தள்ளும் பாணதீர்த்தம், சிற்றாற்றில் குற்றால மலையில் உள்ள பொங்குமாம் கடல், இவையெல்லாமே ஆபத்தானதுதான். தலையருவில் பொங்கி வரும் தாமிரபரணியில் டைவ் அடித்து குளிப்பவர்கள் பலர் அப்படியே பாறையில் சிக்கி உடல் கூட கிடைக்காமல் போய் விடுவார்கள்.
பொதிகை மலையை தூரத்தில் இருந்து பார்த்தால் அருவிகள் அழகாக தெரியும். அதை நம்பி இறங்கி விடக்கூடாது.
பாணதீர்த்தம், கல் யாண தீர்த்தம், அகத்தியர் அருவி போன்ற அருவிகளின் அருகில் உள்ள தாடகத்தில் இறங்கி நூற்றுக்கணக் கான உயிர் பலியாகி உள்ளது. கார ணம் வெளியூர்காரர்கள் பாறை எது, பள்ளம் எது என்று தெரியாமல் நீர்சுழலில் மாட்டிக் கொள்வதே காரணமாகும்.
நாம் ஏற்கனவே கூறியபடியே பாணதீர்த்தம் குளிக்க இத மான அருவி. இங்கு தான் மிக அதிக ஆபத்து உள்ளது. திடீரென பொருநையாற்றில் வெள்ளம் வரும்போது, குளித்துக் கொண்டு இருப்பவர்களை அடித்து சென்று விடும். இங்கு எப்போது வெள்ளம் வரும் என்பது யாருக்குமே தெரியாது. பூங்குளம், இஞ்சு குழியில் பெய்யும் அடை மழை பாணதீர்த்தத்தில் குளிப்பவர்களுக்கு மேக கூட்டமாகத் தான் தெரியும். ஆனால் தீடீரென்று வெள்ளமாக வந்து விழும் போது, குளிப்பவர்களை பள்ளத்தில் தள்ளி திக்கு முக்காட செய்து சாகடித்து விடும். அதன் பின் உடலை கூட கண்டுபிடிக்க இயலாது. இதில் பெரும்பாலும் இயற்கை அழகை படம் பிடிக்க முயலும் புகைப்படக்காரர்கள்தான் சிக்கி கொள்வார். பாறை இடுக்கில் நின்று படம் எடுக்கும் போது; வெள்ளத்தில் தடுமாறி விழுந்து பலியாகி விடுகின்றனர்.
எனது நண்பர் எழுத்தாளர் ராஜநாரயணன். இவர் எழுதிய நாவலில் தான் முதல் முதலில் பாணதீர்த்தத்தில் உள்ள ஆபத்து வெளியே தெரியவந்தது. ஏற்கனவே நாம் கரிசல் எழுத்தாளர் கி. ராஜ நாரயணன் குறித்து கேள்விப்பட்டிருககிறோம். தாமிரபரணி கரை எழுத்தாளர் தான் என் நண்பர் ராஜ் நாரயணன். அவர் கி.ராஜ நாராயணன். இவர் பா. ராஜநாரயணன். ஒரு சமயத்தில் கி.ரா இவரை பார்ககும் போது என் பெயரில் எழுதுகிறாய். என் பெயரை கெடுத்து விடாதே என்று கூறினாராம். அதற்காகவே ராஜ நாராயணன் பல்வேறு விதத்தில் முயற்சி செய்து வந்தார்.
ராஜ் நாரயணனுக்கு தேடல் அதிகம். தாமிரபரணி ஆற்றில் பொதிகை மலைக்குள் நுழைந்து பல்வேறு நிகழ்ச்சியை தேடி விஜய் டிவியில் நடந்தது என்ன என்ற நிகழ்ச்சி நடத்தி பிரபலமானவர். இவர் வாலிப வயதில் கல்லூரி முடித்த போது விகடன் மாணவர் பத்திரிக்கையாளராக சேர்ந்தார். அப்போது வித்தியாசமான கட்டுரை எழுதி வந்தார். இதற்கிடையில் இவருக்கு கிருஷ்ண வேணி என்னும் தொடர் எழுத வாய்ப்பு கிடைத்து. கிருஷ்ணவேணி தொடர் அந்த சமயத்தில் மிகப் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து கல்லூரி பயணமாக வந்த கிருஷ்ண வேணி பாணதீர்த்தம் அருகில் குளிக்கும்போது விழுந்து இறந்து விட்டார். அவரின் பாடியை எடுக்க பல நாள்களானது. அதுதான் கதை. எப்படி மீட்டார்கள். அதில் என்னென்ன பிரச்சனை ஏற்பட்டது. என்பதை விளக்கும் அருமையான நாவல்.
இந்த நாவலின் வெளியிட்டு விழாவில் தே.பா. தி.க.சி உள்பட பலர் திருநெல்வேலி வரலாற்று பிரபலங்கள் கலந்துகொண்டனர். தோ. பா பேசும் போது, “காரையாறு பகுதியில் தான் தாமிரபரணி ஆறு தோன்றுகிறது என நினைத்து இருந்தோம். ஆனால் பாணதீர்த்தம் ஒன்று தாமிரபரணியில் உள்ளது. அதில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்துள்ளது. என்பதை இந்த நாவலை வாசித்த பிறகே தெரிகிறது” என்று பெரும்மிதம்கொண்டார்.
அந்த அளவுக்கு தாமிரபரணி தோன்றும் பொதிகை மலைக்குள் நுழைந்து பல்வேறு நிகழ்சியை நடத்தியவர். , விஜய் டிவியில் நடந்தது என்ன? என்றதொரு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்சிக்காக இவர் ஊர் ஊராக நடந்து சென்று பல்வேறு செய்திகளை சேரித்து அறிமுகம் படுத்தினார். பிற்காலத்தில் விஜய் டிவியில் முன் ஜென்மம் என்றவொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சிங்கம்பட்டி ஜமீன்தார் வரலாற்றை வெளியே கொண்டு வர நிகழ்ச்சி நடத்தியவர். சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் நல்லத்தொடர்பை வைத்திருந்தார். அவர் கடைசி காலத்தில் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஏறும் போது ராஜ் நாரயணனிடம் பேச வேண்டும் என தனது உதவியாளர் கிட்டு அய்யா மூலமாக பேசியவர். அவர் இறுதியில் பேசியது இவரிடம்தான். தற்போது அவர் நம்மை விட்டு பிரிந்து 2 வருடம் கடந்து விட்டது. அந்த மகானை இழந்து விட்டோம். ஆனாலும் அவரை பற்றிய நிறைய தொடர்களை தாமிரபரணி ஆற்றோடு சேர்ந்து எடுத்து ஒளிபரப்பியவர் ராஜ் நாரயணன். தாமிரபரணி பற்றி நிறைய கட்டுரை விஜய் டிவியில் காட்டியுள்ளார். பொதிகைமலை காட்டுக்குள் சென்று புலி கணக்கெடுப்பு எடுக்கும் போது உள்ளே போய் புலிகள் தடங்களை காட்சி படுத்தியவர். அதோடு மட்டுமல்லாமல் ரஜினி காந்த அடிக்கடி செல்லும் இமயமலை பாபா குகைக்கு சென்று அங்கே தங்கி நிகழ்ச்சிகளை எடுத்து ஒளிபரப்பு செய்தவர். அதோடு மட்டுமல்லாமல் வட மாநிலத்தில் படம் எடுக்கும் பாம்புகளோடு வாழும் பெண்ணைப்பற்றி படமெடுத்து அதையும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தவர். தாமிரபரணியை நேசித்தவர். சென்னையில் வாழ்ந்தாலும் தாமிரபரணியை மறக்காதவர். எனவே தான் பாணதீர்த்தம் என்ற வுடன் எழுத்தாளர் பா.ராஜ் நாரயணன் தான் நினைவுக்கு வருகிறார்.
அவர் கிருஷ்ணவேணி நாவலை வெளியிட்ட பிறகே பாணதீர்த்தத்தில் குளித்து உயிரை பலி கொடுப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது. இதற்காக படகோட்டிகள் சார்பில் ஒரு தடுப்பு காவலர் அந்த காலத்தில் நியமிக்கப்படடார்கள். அவர் பெயர் காந்தி. அவர் வாட்ச்மேனாக பாணதீர்த்தத்தில் வேலைக்கு வந்த பிறகு உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை.
இவர் திடீர் வெள்ளத்தை அறிந்து தடுப்பு வேலிக்கு மறுபுறம் செல்பவர்களை தடுப்பது, கயிறு போட்டு ஆட்களை காப்பாற்றுவது எனபலவழிகளில் உதவி புரிந்து வருகிறார். நான் தமிழ்முரசு நிருபராக இருந்து அவரிடம் பேசிய போது அவர் கூறிய தகவல் நமக்கு புதுமையாக இருந்தது.
நான் நெல்லை மாவட்டம் அழகியபாண்டியபுரம் அருகில் உள்ள தெற்குவாகை குளத்தை சேர்ந்தவன். எனது தந்தை பெயர் சண்முகவேல். நான் எனது மனைவி வளர்மதி மற்றும் 3 மகன்களுடன் காரையாற்றில், வசித்து வருகிறேன். என்னை படகு உரிமையாளர்கள் சம்பளம் கொடுத்து பாணதீர்த்தத்தில் வாட்ச்மேனாக நிறுத்தியுள்ளனர். படகில் வரும் பயணிகளை கூட்டி வந்து பாணதீர்த்தத்தில் குளிக்க வைத்து பின், அவர்களை பத்திர மாக படகில் ஏற்ற வேண்டியது எனது பணி:
மேகக் கூட்டங்களை கவ னித்துக் கொண்டே இருப்பேன். கருமேகம் சூழ்ந்து திடீர் மழை கொட்டினால் உடனே பயணி களை எச்சரிப்பேன். தப்பி தவறி யாரும் மாட்டிக் கொண்டால் காப்பாற்றுவேன். கடந்த 4 மாதங்களுக்கு முன் வெள்ளம் வந்தது. உடனே ஓடி சென்று குளித்தவர்களை ஓரமா ஒதுக்கி விட்டு சுமார் 100 அடி பள்ளத்திற்கு கீழே குளித்து கொண்டிருந்த ஒருவரை கயிறு கட்டி காப்பாற்றி இருக்கிறேன். ஆண்டவன் புண்ணியத்தில் நான் வந்த பிறகு உயிர்பலி எதுவும் ஏற் படவில்லை.
பெரும்பாலும் புகைப்படம் எடுக்கும் ஆவலில் சுற்றுலா பயணிகளில் பலர், பாறை ஓரத்தில் நின்று புகைப்படம் எடுக்க முயற் சிப்பார்கள். நான் அப்படி படம் எடுக்க அனுமதிக்கவே மாட் டேன். தடுப்புக் கம்பிக்கு உள்ளே போகவும் விடமாட்டேன்.
இவ்வாறு கூறினார்.
அடுத்த உயிர் பலி வாங்க துடிக்கும் கல்யாண தீர்த்த தடாகம் குறித்து நாம் பார்க்கலாம்.
சிவன் பார்வதியின் கயிலாய மலை திருமணத்தை பொதிகை மலையில் அகத்தியருக்கு காட் டிய இடம் கல்யாண தீர்த்தம். இதற்கு சிங்க தீர்த்தம் என்ற பெய ரும் உண்டு. இங்கு ஒரு தடாகம் உள்ளது. இது 30 அடி ஆழமாக இருக்குமென்று கருதப்படுகிறது.
இந்த இடத்தை பொறுத்தவரை அகத்தியர் அருவிக்கு 100 மீட்டர் மேலே இருந்தாலும், கல்யாண தீர்த்தத்தில் தண்ணீர் விழுவது வெளியே தெரியாது. பாறை இடுக்கு வழியாக வருவதால் இங்கு சுற்றுலா பயணிகள் குளிப் பதற்கு வருவதில்லை.
அருகில் உள்ள கோடிலிங்கேஸ்வரர்-லோகநாயகி மற்றும் அகத்தியர் கோவில் வரும் பக்தர்கள் பக்தி மார்க்கமாக வரு வதாலும், அகத்திய மாமுனி இங்கு வாசம் செய்வதாக கருதப் படுவதாலும் பொழுது போக்க யாரும் வருவதில்லை. ஆனாலும் தப்பி தவறி இறங்கினால் ஆபத்துதான். இங்குள்ள கல்யாண தடாகத் தில் உயிர்பலியை தடுக்க பாது காப்பு வேலியோ, வாட்ச்மேனோ இல்லை. ஆனால் சுற்றுலா பயணி கள் இதில் இறங்கினால் உயிரு டன் திரும்புவதும் கடிதம். எனவே தான் தற்போது இங்கு யாரும் செல்லக்கூடாது என வனத்துறை தடை விதித்து விட்டது. ஆனாலும் அழகான இடம். அந்த அழகை ரசிக்க நம்மை விடவில்லை என்பது மனதுக்கு வருத்த்மாகவே உள்ளது.
அகத்தியர் அருவியை பொருத்தவரை மிக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தினமும் குளித்து வருகின்றனர். தடுப்பு வேலி நன்றாக அமைக்கப் பட்டுள்ளது. எனவே இவ்விடத்தில் உயிர்பலி ஏற்பட வாய்ப்பில் லை. ஆனால் அருவிக்கு போகும் வழியில் உள்ள தாம்போதியின் மேலே உள்ள பெரிய பெரிய பாறைகளுக்கு, இடையில் உள்ள தடாகத்தில் வெளியூர் பயணிகள் அதிகம் பேர் விழுந்து குளித்து நீச்சல் அடிப்பர். காரணம் இந்த தடாகம் கிணறு போல் தேங்கி கிடக்கிறது தண்ணீர் என்று எல்லோருக்கும் தோன்றும். ஆனால் இது தான் மிகப் பெரிய ஆபத்தான தடாகம். இதற்குள் ஒரு – மரண நீர்சுழல் உள்ளது.
அந்த சுழலில் குளிப்பவர்கள் பெருவிரல் பட்டாலே போதும். உள்ளே இழுத்து சென்று விடும். அதன்பின்னர் உடலை மீட்க இயலாது. ஒரு சமயம் இங்கு குளித்த ஒருவரை காணவில்லை.. என்று தீயணைப்பு படையை வைத்து தேடியும் அவரது உடல் கிடைக்க வில்லை. இதற்காக ஏற்பாடு ஒன்றை செய்தார்கள்.
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


