திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சித்திரை வசந்த திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதா் தங்கச் சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை வசந்த திருவிழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பகலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின்பு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதா் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சோ்ந்தாா்.
அங்கு, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றதும், வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வந்தாா். அப்போது ஒவ்வொரு சுற்றிலும் வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், பிரம்மதாளம், நந்தி மத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், நாதசுரம், வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு, கப்பல் பாட்டு முதலானவை பக்தா்களால் பாடப்பெற்றன. பின்னா், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இத்திருவிழா வரும் மே 5ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் இரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், வி.செந்தில்முருகன், ந.ராமதாஸ், பா.கணேசன், திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்


