தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இராமானுஜம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் டிங்கரிங் லேப் திறப்பு விழா நடந்தது. இதனை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் திறந்து வைக்க வருகை தந்தார். அவரை பள்ளி மாணவ மாணவிகள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
அதன்பின்னர் மாணவ மாணவிகளிடம் அவர் பேசுகையில், இந்த பள்ளிக்கு வருகை தரும் மாணவ மாணவிகளுக்கு சாலை வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் சரியாக இல்லை என்று தெரிவித்தார்கள். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், சீனா போன்ற பெரிய நாடுகள் ஏன் வல்லரசு நாடுகளாக இருக்கிறது என்றால் ஏன் நம்மால் அந்த அளவிற்கு வர முடியவில்லை என்றால் அவர்கள் கண்டுபிடிப்புகளில் அதிகமாக இருக்கிறார்கள். நம்மிடம் ஏன் அப்படி இல்லை என்றால் இது போன்ற பயிற்சிகள் இல்லை என்பதால் தான். நாம் செய்து பார்க்க கூடிய இடங்கள் போதிய அளவில் இல்லை. கண்டுபிடிப்புகளில் நாம் குறைவாகவே உள்ளோம். வெளிநாட்டு கம்பெனிகளில் வேலை செய்கிறோமே தவிர புதிதாக உருவாக்குவதற்கு நாம் முன் வரவில்லை. அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை தான் நாம் நம்பி இருக்கும் நிலை உள்ளது. அவர்களால் தான் இது போன்ற கண்டுபிடிப்புகளை செய்ய முடியும் என்கின்ற காலம் போய், நம்மாலும் சாதிக்க முடியும், அதற்கு பெரிய விஷயம் ஒன்றும் தேவை இல்லை. சிறு சிறு விஷயங்களை வெற்றிகரமாக செய்தாலே ஒரு நாள் நம்மாலும் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப முடியும் என்று அவர் மாணவ மாணவிகள் மத்தியில் உற்சாகமாக உரையாற்றினார்.


