முறப்பநாட்டில் தொலைந்த மோதிரத்தை மீட்டு கொடுத்த காவலரை தூத்துக்குடி ஊரக துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பாராட்டிய துணை கண்காணிப்பாளர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோயில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நேற்றைய முன்தினம் விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் குளிக்க வந்தனர். அவர்களில் தூத்துக்குடி டவுணை சேர்ந்த அமலன் என்பவர் தனது 30 ஆயிரம் மதிப்புள்ள மோதிரத்தை தவறவிட்டு விட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலிசாரிடம் தகவல் தெரிவித்தனர். அனைவரும் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை. எனவே அமலன் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதற்கிடையில் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நெல்லை மாநகர ஆயுதப்படை தலைமை காவலர் முத்துக்கிருஷ்ணனிடம் அந்த மோதிரம் கிடைத்தது. உடனே முத்துக்கிருஷ்ணன் அந்த மோதிரத்தை முறப்பநாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி ஊரக துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளர் சந்தீஷ், தலைமை காவலர் முத்துகிருஷ்ணனை நேரில் வரவழைத்து, பரிசு பொருள்கள் மற்றும் நற்சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார். அவருடன் முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உடன் சென்றார்.