கீழ திருவேங்கடநாத புரத்தில் உள்ள கோயில்கள் குறித்து இனி காணலாம்.
கீழ திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவில் குறித்து கூறப்படும் வரலாறு குறித்து இனி பார்க்கலாம். இக்கோவிலும் மிகவும் பழமைவாய்ந்தது. பனிரெண்டாம் நூற்றாண்டில் வீரபாண்டியன் என்ற மன்னரால் சேர, சோழ, பாண்டிய கால முறைப்படி கட்டப்பட்டது. இத்திருக் கோவிலின் வடக்குபுறம் குபேர வாசல் உள்ளது. இதுவே கோவிலுக்குச் செல்லும் பாதையாகும். இந்தக் கோயிலில் உள்ள பகவானை பிருகு முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
மூலவர் ஸ்ரீவரதராஜ பெருமாள் சதுர் புஜத்துடன் வலதுபுறம் ஸ்ரீதேவியுடனும், இடதுபுறம் பூமாதேவியுடனும் காட்சியளிக்கிறார். இவரது வலதுபுற கரங்களில் ஒன்றில் சக்கரமும், மற்றொரு கரத்தில் தனரேகையும் ஓடுகிறது. இடதுபுற கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொரு கரத்தில் கதாயுதமும் காணப்படுகிறது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்குச் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார். இவருடைய தனரேகை கரத்தில் பணம் வைத்து எடுத்துச் சென்றால் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆகையால் இவரை “தனரேகை பெருமாள்” என்றும் அழைக்கிறார்கள். இந்தக் கோவிலில் தற்போது ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
இவரை வாழவைக்கும் ஸ்ரீ வரதராஜபெருமாள் என்றும் கூறுவர். சுமார் பதினான்காம் நூற்றாண்டில் திருநெல்வேலி சீமையை ஆண்ட அரசர் இக்கோவிலில் தரிசனம் செய்ய வந்தார். அப்போது அர்ச்சகர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டார். ஆனால் வந்த அரசனை ஏமாற்றக்கூடாது என்று பகவானே அந்த அரசனுக்கு அர்ச்சகராகத் தோன்றி பூஜைகள் செய்தார். மன்னன் மனம் குளிரச் செய்தார். அதோடு மட்டுமல்லாமல் அர்ச்சகரை அரச குற்றத்திற்கு ஆளாகாமல் காப்பாற்றினார். அர்ச்சகரை வாழவைத்த இந்த பெருமாள் வாழவைத்த பெருமாள் என்று அன்று முதல் அழைக்கப்பட்டார். அர்ச்சகரை மட்டுமா?. அவரை நாடி வரும் அனைவரையும் அல்லவா அவர் வாழ வைக்கிறார். ஆகவே தான் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீவரதராஜ பெருமான் என்னென்ன பலன் கொடுக்கிறாராரோ, அதையெல்லாம் இப்பகவான் தருவதால் இக்கோவிலுக்கு “தென்காஞ்சி” என்ற பெயரும் உண்டு. மேலும் பகவான் கையில் தனரேகை ஓடுவதால் அவரைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதால் இத்தலத்தை “சுக்கிரதலம்” என்றும் கூறுகிறார்கள்.
இங்கு நேர்ச்சை நேர்ந்து முடி காணிக்கை செய்தல், அங்க பிரதிஷ்டை செய்தல், துலாபாரம் எடுத்தல் ஆகிய பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. தென்காஞ்சி என்று இக்கோவிலும், தென்திருப்பதி என்று வேங்கடநாதர் கோவிலும், தென்காலகஸ்தி என்று ராகு ஸ்தலமும் விளங்கும்சிவன் கோயிலும் விளங்குவதால் இந்த ஊருக்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டே இருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்ல நெல்லை டவுணில் இருந்து மினி பஸ் மூலமாக சென்றுவர சகல வசதிகளும் செய்யப் பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு எல்லா அருளும் தரவல்ல இந்த மூன்று கோவில்களிலும் சுவாமி தரிசனம் செய்து தாமிரபரணி ஸ்ரீனிவாச தீர்த்தக் கட்டத்திலும் மூழ்கி நலம் பெற்றுச் செல்லுங்கள்.
ஒரு மனிதன் ஜாதகத்தில் ராகு பகவான் பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்வார். அந்தச் சமயம் அந்த மனிதர் ராகு திசையின் போது நடக்கும் சஞ்சாரத்திற்கு ஏற்ப அவரது பலன்கள் மாறுபடும். ராகுவின் தாக்கம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டால் அவர் பரிகாரம் செய்ய வேண்டிய தலம் தாமிரபரணி கரையின் நான்காம் கைலாயம் என்று அழைக்கப்படும் சங்காணியாகும்.
காணி என்றால் நிலம், செங் + காணி என்றால் செந்நிறத்தில் உள்ள நிலம் என்று பொருள். அதன் படி இங்குள்ள பொத்தையில் உள்ள மண் செந்நிறமாகக் காட்சியளிக்கிறது. மேலும் குன்று போன்ற ஒரு இடத்தில் இந்த ஊர் அமைந்து இருப்பதால் குன்றத்தூர் என்றும் அழைக்கப்படுகிறது.
அகத்திய மாமுனிவரின் முதல் சீடரும், பிரம்மனின் பேரனுமான உரோமச மகரிஷி, தான் முக்தியடைய நவகைலாயங்களை உருவாக்கினார். அதில் நான்காம் கைலாயம் சங்காணி என்று அழைக்கப்படும் திருவேங்கடநாதபுரம். இந்த தலம் கேது தலமாக அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் தாமிரபரணி கரையில் இருந்த இந்த கோயில் தற்போது இயற்கை சீற்றத்தினால் 1 கிலோ மீட்டர் தள்ளி வந்து விட்டது.
முன்னொரு காலத்தில் உரோமச மகரிஷி பிரதிட்சை செய்த சிவனை வணங்கி பலரும் பல நன்மைகள் பெற்றனர். ஆனால் பிறகாலத்தில் ஏற்பட்ட இயற்கை மாற்றத்தில் இந்தச் சங்காணி கிராமமே காணாமல் போய்விட்டது.
அந்தச் சமயத்தில் குன்னத்தூரை ஒரு குறுநில மன்னர் ஆண்டு வந்தார்.. இவருக்குச் சொந்தமான செங்காணி என்ற குன்னத்தூர் அருகில் பொத்தை ஒன்று இருந்தது. இந்த பொத்தையில் ஒரு அரிய மரம் இருந்தது. இந்த மரத்தில் வருடத்துக்கு ஒரு முறை மட்டும் ஒரு பூ பூத்து, ஓரே ஒரு காய் காய்த்து, அதன்பின் அந்தக் காய் பழமாகப் பழுக்கும். இந்தப் பழத்தினைச் சாப்பிட்டால் நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும். ஆகவே இந்தப் பழம் மீது அவருக்கு அளவற்ற பாசம். இந்த மரத்தினை அரணாகக் காத்து வந்தார்.
ஒரு சமயம் அந்த ஊரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் குடத்துடன் தண்ணீர் எடுக்க சென்றாள். அவள் அந்த மரத்தின் அடியில் செல்லும் போது எதிர்பாராத விதமாக அந்தப் பழம் அவளின் குடத்தில் விழுந்தது. அதை அந்தப் பெண்ணும் கவனிக்க வில்லை. தனது வீட்டில் கொண்டு குடத்தினை வைத்து விட்டாள்.
மறுநாள். பழத்தினைக் காணாமல் மன்னன் திகைத்தார். யாரோ வேண்டுமென்றே பழத்தைத் திருடிச் சென்று விட்டனர். அவர்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று சேவகர்களுக்கு உத்திரவிட்டார். சேவகர்கள் பழத்தினைத் தேடி பல இடங்களில் அலைந்தனர். பின் ஒவ்வொரு வீடாகச் சென்று சோதனையிட்டனர். இறுதியில் தண்ணீர் எடுக்க வந்த பெண் வீட்டுக்கு சென்றனர். அங்கே குடத்தில் அந்தப் பழம் கிடப்பதைக் கண்டனர். பழத்தினைத் திருடியது அந்தப் பெண்தான் என்று உறுதி செய்தனர். அந்த பெண்ணை அரசர் முன்னால் கொண்டு நிறுத்தினர். ஆனால் அந்தப் பெண்ணோ மறுத்தாள்.
“எனக்கும் இந்தப் பழத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாள். இந்தப் பழம் என் குடத்தில் எப்படி வந்தது என்றும் தெரியவில்லை” என்று கூறினாள். தன் மீது தவறில்லை என்று கதறினாள். ஆனால் ராஜா கேட்கவில்லை. “அந்தப் பெண்ணைக் கழுவில் ஏற்றுங்கள்” என்று தனது சேவகர்களுக்கு உத்தரவிட்டார்.
அந்தப் பெண்ணைக் கழுவன் திரடுக்குக் கொண்டு சென்றனர். அங்கு கழுவேற்றும் போது கர்ப்பிணி பெண்னான அவள் சாபமிட்டார். “என்னை ஒரு கர்ப்பிணி என்றும் பார்க்காமல் நான் செய்யாத தவறுக்கு என்னைக் கழுவேற்றிய அரசே. இனிமேல் இந்த ஊரில் பசுவையும் பெண்களையும் தவிர எவரும் உயிர்வாழ மாட்டார்கள். இந்த ஊர் மண்ணோடு மண்ணாக அழியட்டும்” என்று ஆவேசமாகச் சாபமிட்டார்.
அதன்படி படிப்படியாக அந்த ஊர் அழிந்தது. பசு மட்டுமே அந்த அழிந்த காட்டில் வாழ்ந்தது. ஆண்கள் அழிந்த காரணத்தினால் இங்கு வாழ்ந்த பெண்கள் எல்லாம் வேறு இடத்துக்குச் சென்று விட்டனர். இதற்கிடையில் வறட்சியான இந்தக் காட்டில் உரோமச முனிவர் பிரதிட்சை செய்த சிவலிங்கமும் கேட்பாரற்று கிடந்தது. ஆனால் சிவபெருமான் திருவிளையாடலை ஆரம்பித்தார். அகிலம் காக்கும் ஆண்டவன் அல்லவா?. அவர் எப்படி அமைதியாக இருப்பார். அவர் தான், இருப்பதை உலகிற்கு உணர்த்த அந்த திருவிளையாடலைத் துவங்கினார்.
அந்தக் காட்டில் இருந்த லிங்கம் மீது அந்தப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள் எல்லாம் சென்று பால் சொரிந்தன. இந்தச் சம்பவம் தினமும் நடந்து கொண்டிருந்தது. எல்லோருக்கும் படி அளக்கும் ஈசனுக்குத் தினசரி பால் அபிசேகம் நடப்பதை அந்த வழியாக வந்த சேவகர் பார்த்தார். அவர் உடனே அந்த இடத்தினை ஆண்ட பாண்டிய மன்னன் செவிக்கு இந்தத் தகவலைக் கூறினார். உடனே மன்னன் அந்த இடத்துக்கு வந்தான். அந்த அற்புதத்தினை தானும் கண்ணால் கண்டான். அவனுக்கு உடனே மனதில் சந்தோஷம் ஏற்பட்டது. அருள்தரும் சிவனுக்கு ஒரு அற்புத கோயிலைப் பாண்டிய மன்னன் கட்டினான். அதன்பின் அந்த கோயில் மீண்டும் பிரபலம் அடைய ஆரம்பித்தது.
சிவபெருமானுக்கு ஸ்ரீகோதை பரமேசுவரன் என்ற கைலாசநாதர் என்று பெயர். அம்பாளுக்கு ஸ்ரீ சிவகாம சுந்தரி என்றும் பெயர் வைத்தும் அழைக்கப்பட்டார்கள். அதன் பிறகு படிப்படியாக பூஜைகள் நடந்தன.
காலம் கடந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த கோயில் மீண்டும் பாழடைந்து விட்டது. அப்போது கோயில் முன்பு 100 க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தன.
இந்தப் பகுதியில் உள்ள சிவபக்தர்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாகக் கோயில் சீரமைக்கப்பட்டது. அப்போது பூஜை செய்ய கர்ப்ப கிரகத்திற்கு கூட அர்ச்சகர்கள் செல்ல முடியாது. அந்த அளவுக்கு அங்கு லிங்கம் மீது நாகங்கள் படுத்து கிடந்து படமெடுத்து ஆடும். சில நேரம் அர்ச்சகர்கள் நாகராஜாவின் விளையாட்டுக்குப் பயந்து பூஜை வைக்க கூட உள்ளே செல்வது கிடையாது. ஆனால் தற்போது இந்தக் கோயிலில் பூஜைகள் சிறப்பாக நடக்கிறது.
இக்கோயிலில் சிவராத்திரி , திருவாதிரை, பிரதோஷம் போன்ற பூஜைகளும் நித்திய பூஜைகளும் மிகச்சிறப்பாக நடக்கின்றன. இக்கோயிலில் ராகு பரிகாரம் வேண்டி கோதை பரமேஸ்வரனுக்குப் பூஜை செய்தால் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும்.கால சர்ப்ப தோஷம், நாகதோஷம் போன்றவை நீங்கும். இதற்காக இந்தக் கோயிலில் சிறப்பு ராகு கால பூஜை நடக்கிறது.
வேலை வாய்ப்பு கிடைக்கவும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் இந்தப் பகவானை வந்து வணங்கி நலன் பெருகிறார்கள். தொழில் விருத்தி அடைந்து அமோக லாபம் கிடைக்கவும் தொழில் அதிபர்கள் இங்கு சிறப்பு பூஜை செய்கின்றனர். இதில் சோகமான விசேஷம் என்னவென்றால் கோயில் பூஜை சிறப்பாக நடக்க, நடக்க இக்கோயில் முன்பிருந்த 100 வீடுகளில் வாழ்ந்தவர்களும் அந்த வீட்டை அப்படியே போட்டு விட்டு வேறு இடத்துக்குச் சென்று விட்டனர். தற்போது இந்தக் கோயில் அருகே சென்றால் உடைந்து கிடக்கும் வீடுகளை நாம் காணலாம். ஒரு வேளை ராகு ஸ்தலம் என்பதனால் இப்படி நடந்து இருக்குமோ.
இக்கோயில் கிழக்கு பார்த்து இருக்கிறது. சுவாமி கோயிலில் முன் மண்டபம், அர்த்த மண்டபம், நடு மண்டபம் ஆகிய மூன்று பகுதிகளாக உள்ளது. இதில் அம்மன் தெற்கு நோக்கி அமர்ந்து அருள் வழங்குகிறார். கோயிலுக்கு வரும்போது தெற்கு வாயில் வழியாக உள்ளே வரும் நாம் முதலில் அம்மனைதான் வணங்குகிறோம். கருவறையின் மேல் விமானம் அமைந்துள்ளது. கருவறைக்கு இடதுபுறம் விநாயகர் உள்ளார். வலதுபுறம் சிறு சிவலிங்கமும் அதன் முன் நந்திபெருமானும் உள்ளனர்.
இந்த கோயில் மூலவர் கைலாசநாதர் மீது எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு அதிசயம் உள்ளது. அதாவது அவரது நெஞ்சில் சர்ப்பம் ஒன்று உள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை எப்போதும் பார்க்க முடியாது. அபிசேகம் நடக்கும் போது மட்டுமே பார்க்க முடியும். ராகுக்கே அதிபதியான இவர் சர்ப்பத்தினை தனது உடலில் தாங்கி நிற்பது போல் இந்த அமைப்பு நமக்கு விளக்கம் தெரிவிக்கிறது. வெளியே நந்தி பெருமான் மிக பிரமாண்டமாக உள்ளார். இந்த நந்தி பெருமானை நன்றாகக் கவனித்தால் ஒரு அபூர்வம் நமக்கு விளங்கும். எழுந்து நிற்க முயற்சி செய்வது போல் நந்தி பெருமான் கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் நந்தி பெருமான் ஒடிவந்து காப்பார் என்பது போல இந்த அமைப்பு உள்ளது.
அடுத்து பிரகாரம் சுற்றி வருவோம். இந்தக் கோயில் பிரமாண்டமான கோயில் என்று சொல்ல முடியாது. ஆனாலும் கோயில் அமைப்பு மிக விசேஷமாக இருக்கும். இந்தக் கோயிலில் கன்னி மூலையில் உள்ள வினாயகரை யாரோ திருடிச் சென்று விட்டனர். ஆகவே தற்போது புதிய விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
கோயிலைச் சுற்றி வந்தால் பன்னிரெண்டு கையுடன் பிரமாண்டமான முறையில் ஆறுமுகநயினார் உள்ளார். இவரை பிரதிட்சை செய்த பிறகே, அவரைச்சுற்றி மண்டபம் கட்டியிருக்க வேண்டும். அந்த அளவுக்கு ஓரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப் பெரிய சிலையாக இந்த ஆறுமுக நயினார் உள்ளார். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆறுமுகநயினாரைப் பார்த்த கையோடு சண்டிகேஸ்வரரை வணங்கி விட்டு கோயில் முன்னே வந்தால், அங்கு பைரவர் தனிச்சன்னதியில் உள்ளார்.
இந்தக் கோயிலில் மற்றுமொரு அதிசயம் முன்பொரு காலத்தில் நடந்து வந்தது. அதாவது இந்தக் கோயிலில் நில அளவு கோல் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். இந்த அளவு கோல் மூலமாக ஊரில் ஏற்படும் நில சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை இந்த பகுதி மக்கள் சாமாளித்துள்ளார்கள் என்று கல்வெட்டுகள் கூறுகிறது.
இக்கோயிலில் உள்ள மற்றுமொரு கல்வெட்டு மூலமாக பார்க்கும் போது. இந்தக் கோயில் 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. என்று தெரிகிறது. அந்த கல்வெட்டில் கோயில் பூஜை நடந்த வீரபாண்டி மன்னன் நான்காயிரத்து இருநூறு ரூபாய் கொடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்காலத்தில் இந்தக் குன்னத்தூர் என்ற “சங்காணி கீழ்வெம்ப நாட்டு செங்காணியான நவமணி நாராயண சதுர்வேதிமங்கலம்” என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் சிவ பெருமான் ராகு அம்சமாக உள்ளார். விருச்சிகம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் இந்த பகவானை வணங்கி நலம் பெறலாம். இத்தலத்து சிவபெருமானை வழிப்பட்டால் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சிவபெருமானை வழிபட்டதற்கு சமம். இந்தக் கோயிலை வணங்குவதன் மூலமாக வயிற்று கோளாறு, மனநோய், மூலநோய் ஆகியவை நீங்கும். கல்வி தடை, திருமண தடை, நீங்கி புத்திரபாக்கியம் கிடைக்கும்.
இந்தக் கிராமத்திற்கு வந்து சென்றால் திருப்பதிக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டும் என்ற கூற்றும் பக்தர்கள் மத்தியில் நிலவி உள்ளது. திருப்பதிக்குச் சமமாக திருவேங்கிடநாதபுரத்தில் பெருமாள் கோயில் உள்ளது. கீழ் திருப்பதிக்குச் சமமாக இந்தக் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. காளகஸ்திக்கு இணையாக சிவபெருமானின் இந்த நான்காம் கைலாய சிவதலம் உள்ளது. எனவே இந்த ஊருக்கு வந்தால் திருப்பதிக்குச் சென்று வந்த புண்ணியம் கிட்டுகிறது. ஆகவே இந்தக் கிராமத்துக்கு டவுணில் இருந்து சங்காணி ரோட்டின் வழியாக வந்து காளகஸ்தியாக விளங்கும் கோதபரமேஸ்வரரை வணங்கி விட்டு, கீழத்திருப்பதியான ஸ்ரீவரதராஜபெருமானை வணங்கி விட்டு, பின் மேல திருப்பதியாக விளங்கும் வெங்கடேச பெருமானை வணங்கி வேண்டும் வரம் பெறுகிறார்கள். “ஆசைக்கொரு பெண்ணோ! ஆஸ்திக்கு ஒரு ஆணோ! இல்லையே” என்று மனம் வருத்தப்படுபவர்கள். “பார்க்காத டாக்டர் இல்லை! சுற்றாத கோயில் இல்லை! உண்ணாத மருந்தில்லை! என்று மனது வேதனை படுபவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து ராகு பரிகாரம் செய்தால் நிச்சயம் பிள்ளைபேறு கிடைக்கும். இதற்காகப் பரிகார பூஜை செய்ய அர்ச்சகர்கள் தயார் நிலையில் உள்ளனர். அர்ச்சகர்களை போனில் தொடர்ப்பு கொண்டு பேசிவிட்டு வந்தால் வேண்டிய ஏற்பாடுகளை செய்து வைப்பார்கள்.


