விழுப்புரம் திருவிக வீதியில் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சசிகலா என்பவர் பணியாற்றி வருகிறார். காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு பள்ளியில் நடந்த இறைவணக்க கூட்டத்தின்போது, காலாண்டு தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று காத்திருக்கிறது, எனவே மாணவிகள் அனைவரும் நல்லமுறையில் படிக்குமாறு கூறினார்.
இந்த சூழலில் விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த பிளஸ் 2 மாணவி எஸ்.லோகிதா, காலாண்டு தேர்வில் 600க்கு 581 பெற்று முதல் மாணவியாக திகழ்ந்தார்.
இதனையடுத்து மாணவிக்கு எதிர்பாராத பரிசாக, தலைமை ஆசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மாணவி லோகிதாவை தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து அவருக்கு கிரீடம் சூட்டி அழகு பார்த்தனர்.
தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட மாணவி லோகிதா ஒவ்வொரு வகுப்பறையாக சென்று கண்காணித்தார். தொடர்ந்து, பள்ளியில் உள்ள சத்துணவு மையத்துக்கு சென்று மாணவிகளுக்கு வழங்க இருந்த மதிய உணவை சாப்பிட்டு பார்த்தார்.
தொடர்ந்து மதிய உணவு இடைவேளை முடிந்து ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வகுப்புகளுக்கு செல்கின்றனரா என்று சரிபார்த்தார். அதோடு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமை ஆசிரியராக தனக்கு கிடைத்த ஒரு நாள் வாய்ப்பை சிறப்பாக செய்து முடித்த மாணவி லோகிதாவை பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
மாணவி லோகிதா கூறும்போது, எனக்கு ஒருநாள் தலைமை ஆசிரியர் பதவி வாய்ப்பு கிடைக்கும் என்று கனவில்கூட நான் நினைத்து பார்க்கவில்லை. தலைமை ஆசிரியரின் இந்த நற்செயல், என்னைப்போன்ற மற்ற மாணவிகளையும் அதிக மதிப்பெண்கள் பெற உந்துதலாக அமையும். ஓரளவு நார்மலாக படிப்பவர்கள்கூட இன்னும் கூடுதல் ஆர்வம் செலுத்தி படிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்
நன்றி- ஒன்இந்தியா


