திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து மற்றும் வல்லநாடு மலைப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பகுதிகள் உள்ளது. இந்த பகுதியில் மிளா, காட்டுநாய், மான் என ஏராளமான காட்டு வன விலங்குகள் உள்ளது. இங்கு உள்ள வன விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கம்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜார் பகுதியில் அதிகாலை 3 வயது மதிக்கத்தக்க மிளா ஒன்று புகுந்தது. செய்துங்கநல்லூர் பகுதி திருநெல்வேலி மாவட்ட எல்லை பகுதி என்பதால் இந்த மிளா இந்த பகுதியில் நுழைந்தது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் மற்றும் வல்லநாடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் மிளாவை பார்க்க பொதுமக்கள் கூடியதால் மிளா ஆங்காங்கே ஓடியது. பின்னர் அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தின் வளாகத்தில் புகுந்தது. அங்கு வந்த போலீசாரும் வனத்துறையினரும் மிளாவை அந்த மண்டபத்தின் வளாகத்தில் வைத்து அடைத்தனர். மிளாவை காண ஏராளமான பொதுமக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை, உதவி ஆய்வாளர் சதீஷ் உள்பட போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர்.
மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவின்படி வல்லநாடு வன அலுவலர் பிருந்தா, வனவர் அப்பாசாமி, ஜெயக்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் கந்தசாமி, காசிராஜா, சண்முகம், பேச்சி உள்பட பலர் வருகை தந்து மிளாவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மிளாவை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளார்.


