சாத்தான்குளம் அருகே ரேசன் கடையில் பிரதமர் நரேந்திர மோடி படம் அகற்றப்பட்டதை கண்டித்து பாஜகவினர் வட்டாட்சியரிடம் முறையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து ரேசன் கடையில் பிரதமர் நரேந்திர மோடி படத்தை அண்மையில் பாஜகவினர் வைத்துள்ளனர். இந்நிலையில் கூட்டுறவு கடன் செயலர், மற்றும் ரேசன் கடை ஊழியர் பிரதமர் படத்தை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாவட்ட பொதுச் செயலர் செல்வராஜ் தலைமையில் பாஜகவினர் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று வட்டாட்சியர் தங்கையாவிடம் மனு அளித்தனர்.
மனுவில் பிரதமர் படத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் படத்தை அலுவலகத்தை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் கண்டித்து போராட்டம் நடத்திட உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்ற வட்டாட்சியர் தங்கையா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பாஜக ஒன்றியத் தலைவர் செந்தில், மாவட்ட பிரச்சரா பிரிவு தலைவர் மகேஸ்வரன், துணைத் தலைவர் சரவணன், ஒன்றிய துணைத் தலைவர் ஜெயசுந்தர்ராஜ், ஒன்றிய வர்த்தக பிரிவு துணைத் தலைவர் செந்தில், மாவட்ட ஓபிசி பிரிவு செயலர் எட்வர்ட் ஆகியோர் உடனிருந்தனர்.


