ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது.
நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு சுவாமி பொலிந்து நின்றபிரான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி புகழ்பெற்ற கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் 9-ஆம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. காலை 4:30 மணிக்கு திருமஞ்சனம், 5 மணிக்கு கோஷ்டி நடைபெற்றது. பின்னர், காலை 6:25 மணிக்குள் சுவாமி பொலிந்து நின்றபிரான் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க திருத்தேரில் எழுந்தருளினார்.
காலை 8 மணியளவில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோபாலா’ என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் சித்திரை வீதியில் தொடங்கி தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து காலை 10:15 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


