நேற்று அதிகாலையில் தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் தேர் விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், நவத்திருப்பதிகளில் முதல் ஸ்தலமாகவும் விளங்கும் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் கடந்த வாரம் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது.
இந்த நிலையில் தஞ்சை தேர் விபத்து காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக இன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் டிஎஸ்பி வெங்கடேசன், வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் இசக்கி ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், மின்வாரியத்துறையினர், தீயணைப்புத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், போக்குவரத்துதுறையினர், பேரூராட்சி நிர்வாகத்தினர் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம் நடைபெறும் பகுதியில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.


