முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் குடும்பத்துடன் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த தேவராஜன் (வயது 60) என்பவர் தனது மனைவி லட்சுமி மற்றும் மகனுடன் திருச்செந்தூருக்கு அதிகாலையில் வருகை தந்துள்ளனர். அவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி முன்புள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது கடலில் திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தில் தேவராஜனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கடலில் தவறி விழுந்த தேவராஜன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
அந்த சமயத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் சிவராஜா, ஆறுமுகநயினார், இசக்கி, விக்னேஷ், ராமர் ஆகியோர் உடனடியாக கடலுக்குள் இறங்கி அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அங்கிருந்து ஸ்டெக்சர் மூலம் கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டார். இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்செந்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாளை அமாவாசை என்பதனால் கடலில் அலையின் சீற்றம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே திருச்செந்தூர் கடலில் நீராடக்கூடிய பக்தர்கள் பாதுகாப்பாக நீராடும்படி திருக்கோவில் நிர்வாகத்தின் மூலமாகவும் காவல்துறை மூலமாகவும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகிறார்கள்.


