தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தோப்பூர் வடக்குத் தெரு முத்துவேல் மனை சேர்ந்தவர் கன்னியம்மாள். அவர் அருகே உள்ள அமலிநகரில் சத்துணவு திட்டத்தின் கீழ் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் கன்னியம்மாளை காணவில்லை. அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.
இதற்கிடையில் இன்று காலை திருச்செந்தூர் தெப்பக்குளம் பகுதியில் கன்னியம்மாளின் செருப்பு கிடப்பதை உறவினர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தெப்பக்குளத்தில் படகுகள் மூலம் தேடினர். அங்கு கன்னியம்மாள் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி திருச்செந்தூர் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் தெப்பக்குளத்தில் சத்துணவு பணியாளர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


