தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இணைய வங்கி வழியாக இபிஎப் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகவும் நம்பகமான தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB), தனது இணைய வங்கி (Internet Banking) தளம் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) செலுத்தும் வசதியை இன்று வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியானது, EPFO இணையதளம் மற்றும் TMB-யின் இணைய வங்கி செயலிக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள நேரடி ஒருங்கிணைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வசதியை வங்கியின் செயல் இயக்குனர் வின்சென்ட் மேனச்சேரி தேவசி தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சென்னையைச் சேர்ந்த கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் கவிதா என். ஜார்ஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், டெல்லியைச் சேர்ந்த வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மூத்த அதிகாரிகளான மண்டல பிஎப் ஆணையர் ஏ.கே. பாலிவால் மற்றும் கணக்கு அதிகாரி கபில் ஆனந்த் ஆகியோர் காணொளி வாயிலாகப் பங்கேற்றனர். TMB-யின் மூத்த நிர்வாகிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் மற்றும் டெல்லி EPFO குழுவினரை வரவேற்றுப் பேசிய செயல் இயக்குனர், “இந்த ஆன்லைன் EPF செலுத்தும் வசதி வங்கியின் ஒரு முக்கிய மைல்கல் என்றும், டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மூலம் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதே இதன் நோக்கம்,” என்றும் கூறினார். TMB ஏற்கனவே CBDT, GST மற்றும் ICEGATE ஆகியவற்றிற்கான ஆன்லைன் கட்டண வசதிகளை செயல்படுத்தியுள்ளதாகவும், தற்போது EPF கட்டண வசதியை இணைந்திருப்பது வங்கியின் டிஜிட்டல் சேவைகளை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த வசதியை பிரபலப்படுத்தி, TMB மூலம் செலுத்தப்படும் EPF பரிவர்த்தனைகளை அதிகரிக்க வங்கி தீவிர கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த புதிய வசதியின் பயன்கள்: 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME), சில்லறை வர்த்தகர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களின் மாத சம்பளப் பிடித்தம் உள்ளிட்ட EPF பங்களிப்புகளை, வங்கிக் கிளைகளுக்கு நேரில் செல்லாமலேயே TMB இணைய வங்கி மூலம் நேரடியாகச் செலுத்த முடியும்.
தனது சிறப்புரையில், கவிதா என். ஜார்ஜ் பேசுகையில், “TMB-யில் கணக்கு வைத்திருந்தும், இதுவரை வேறு வங்கிகள் மூலம் EPF செலுத்தி வந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார். மேலும், இந்த டிஜிட்டல் வசதியைப் பயன்படுத்துவது குறித்து TMB வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக MSME வாடிக்கையாளர்கள் மத்தியில் இதனைப் பிரபலப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் அதிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான EPF பங்களிப்பை TMB இணைய வங்கி மூலம் செலுத்த வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த அறிமுகம், டிஜிட்டல் வங்கிச் சேவையில் சிறந்து விளங்குதல், எளிதான விதிமுறை இணக்கம் (Compliance) மற்றும் வாடிக்கையாளர்களின் நலனுக்காக சட்டப்பூர்வ அமைப்புகளுடன் வலுவான ஒத்துழைப்பு ஆகியவற்றில் TMB-யின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு பெயர் பெற்ற பழமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு. தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது. இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 601 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. www.tmb.in என்ற இணையதள முகவரியில் வங்கியினைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.


