இந்திய தொழில் கூட்டமைப்பு தூத்துக்குடியில் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்க்கான வாய்ப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சிஐஐ தூத்துக்குடி தலைவர் வில்சன் ஷிப்பிங் நிறுவன இயக்குனர் செலஸ்டீன் வில்லவராயர் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தை துறைமுக ஆணைய துணை தலைவர் சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் “தூத்துக்குடி துறைமுகத்தை பசுமை ஹைட்ரஜன் மூலமாக மாற்றுவதற்காக 501 ஏக்கர் நிலம் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, இந்த ஆலைகள் வரும் 2027 ஆம் ஆண்டு உற்பத்தியை தொடங்கும்.
இத்துறைமுகத்தில் நடைபெற்று வரும் வடக்கு சரக்கு தளம் அமைக்கும் பணி வரும் 2026 ஆம் ஆண்டு முடிவடையும். அதன் பின்னர் கூடுதலாக அறுபது லட்சம் டன் சரக்குகள் கையாள முடியும். தூத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, கடலுக்குள் காற்றாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வருவதன் மூலமாக 2035 ஆம் ஆண்டு தற்போது ஒன்று புள்ளி ஆறு ஐந்து ஆக உள்ள சரக்கு பெட்டக போக்குவரத்து இரண்டு புள்ளி மூணு ஐந்து மில்லியன் அளவிற்கு அதிகரிக்கும்.
துறைமுகத்தில் இந்த ஆண்டு இதுவரை 20 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு கடந்த ஆண்டை விட ஏழு சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் இந்த துறைமுகத்தில் 43.4 மில்லியன் லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டது. இது 7.3% வளர்ச்சி. இந்த ஆண்டு 50 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம், இத்துறைமுகத்தில் வடக்கு சரக்கு தளம் அமைக்கும் பணி 2026 ஆம் ஆண்டு முடிவடைந்த பின் சரக்கு கையாளும்ம் திறன் மேலும் 60 லட்சம் டன் அதிகரிக்கும்.
கூட்டத்தில் தமிழ்நாடு ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு இணை தலைமை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் கே மேனன் பேசுகையில் ” நாட்டில் கடந்த ஆண்டு 3300 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது அதில் அறுபது சதவீதம் கடல் சார் வாணிபத்தால் நடைபெற்றுள்ளது, உலக வர்த்தகம் மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க ஆராய்ச்சி மேம்பாட்டு பணிகளுக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டும்.
சர்வதேச அளவில் நடைபெறும் ஏற்றுமதியில் 10 சதவீதம் தமிழகத்தில் இருந்து நடைபெறுகிறது. ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், உலக ஏற்றுமதியில் 1.5% இந்தியாவில் நடைபெறுகிறது. இதனை அடுத்த ஆண்டு மூன்று புள்ளி மூன்று சதவீதமாக மாற்ற இலக்கு மேற்கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழ்நாடு தலைவர் ஸ்ரீ வட்ஸ் ராம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில் “மத்திய மாநில அரசுகள் நாட்டில் அதிக அளவிலான முதலீட்டை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக ஒற்றை சாளர வசதிக்கான அரசின் வழிகாட்டுதல் அமைப்பு தொழில் தொடங்குவதற்கான 80 சதவீத பணிகளை எளிமையாக முடித்து தருகிறது.
ஈசாப் டூயிங் பிசினஸ் (Es of doing business) இணையதளம் மூலமாக உடனடி ஒப்புதல் அளித்து செயல்பட்டு வருகிறது, தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக தொழில் தொடங்குவதற்கு தேவையான போக்குவரத்து மற்றும் நிலங்கள் போதுமான அளவுக்கு கிடைக்கக்கூடிய பகுதியாக தூத்துக்குடி உள்ளது. இங்கு தொழில்களை தொடங்கி ஏற்றுமதியை அதிகரிக்க அரசோடு இணைந்து இந்திய தொழில் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் இந்திய வர்த்தக சேவை மைய இணை இயக்குனர் குருசிகேஷ் ரெட்டி, சி ஐ ஐ தூத்துக்குடி துணைதலைவர் மரிய ஆண்டனி, டிபிஜிடி முதன்மை செயல் அலுவலர் செந்தில்குமார் சுப்பிரமணியன், சிஐஐ முன்னாள் தலைவர்கள் சஞ்சய் குணசிங், துறைமுகம் சார்ந்த வணிகர்கள், வங்கியாளர்கள், பல்வேறு தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.


