தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தால் கோடை வெப்பம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான அனல் காற்று வீசி வந்ததுடன், வெப்பநிலையும் வழக்கத்தை விடக் கூடுதலாகப் பதிவாகி வந்தது. இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, நகரின் வான்பரப்பு முழுவதும் கார்மேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது.
தொடர்ந்து, பயங்கரச் சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. பிரதான சாலைகளான விவிடி சாலை, பாளையங்கோட்டை சாலை, ஜின் பாக்டரி ரோடு, டூவிபுரம், ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம் மற்றும் எட்டையாபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது.
திடீர் மழையின் காரணமாகச் சாலைகளில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளின் நிழற்குடைகளில் தஞ்சமடைந்தனர். இந்தத் திடீர் கோடை மழையினால் தூத்துக்குடி நகர் பகுதியில் வெப்பநிலை பெருமளவு குறைந்துள்ளது. கத்திரி வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த முதியவர்கள், பள்ளிச் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த எதிர்பாராத மழையினால் நிம்மதி அடைந்துள்ளனர்.


