கோவில்பட்டி புத்தகத்திருவிழா நிறைவு விழாவில் வாசகர்களுக்கு குலுக்கல் முறையில் மெகா புத்தகங்கள் பரிசு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள விஸ்வா மீட்டிங் ஹாலில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,கோவில்பட்டி ரோட்டரி சங்கம், கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் மே15 முதல் 26ம்தேதி வரை நடந்த புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வாசகர்களுக்கு மெகா புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
புத்தகத் திருவிழாவிற்கு வருகை தரும் வாசகர்களில் குலுக்கல் முறையில் மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முதல் பரிசாக பராசக்தி என்பவருக்கு ரூ3000 மதிப்பிலான புத்தகங்களும்,இரண்டாம் பரிசாக கோகிலவாணி என்பவருக்கு ரூபாய் 2000மதிப்பிலான புத்தகங்களும்,மூன்றாம் பரிசாக கோபிநாத் என்பவருக்கு ரூபாய் ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டது,மேலும் 12ம் வகுப்பில்அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி விஜயலட்சுமிக்கு விரும்பிய புத்தகங்களும்,கலை இலக்கிய போட்டிகளில் வென்றவர்களுக்கு புத்தகங்களும் சான்றிதழும் பரிசாக வழங்கப்பட்டது.
புத்தகத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் முத்துச்செல்வம் தலைமை வகித்தார். கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன்,வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் ரவிவர்மா வரவேற்றார்.
ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர் பரமேஸ்வரன் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள வாசகர்களுக்கு மெகா புத்தகங்களை பரிசாக வழங்கி பேசினார். இதில் கோவில்பட்டி ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன்.கோவில்பட்டி பசுமை இயக்க தலைவர் ஜெகஜோதி,புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் கார்த்திக்,ராஜபாண்டி, காளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


