சாத்தான்குளம் அருகே பறக்க முடியாமல் தவித்த, அரிய வகை கழுகை வனத்துறையினர் மீட்டு சென்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் . இவர் சங்கரன்குடியிருப்பு விலக்கில் உள்ள கெபி அருகில் டீகடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகில் அரிய வகை பறவை ஒன்று பறக்க முடியாமல் தடுமாறி நின்றது. அதனை ஜெயமுருகன், வழக்குரைஞர் பவுன்ராஜ் உள்ளிட்ட அருகில் இருந்தவர்கள் மடக்கி பிடித்து மரநிழலில் கட்டிபோட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் டோமர், வனத்திருப்பதி வன ரேஞ்சர் கனிமொழி, வனகாவலர் அபிஷேக், வனச்சரகர்கள் ஜெய்சங்கர், செந்தில்குமார், வனக்காப்பாளர் காளிராஜன், சாத்தான்குளம் கால்நடை உதவி மருத்துவர் சவுந்தர் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்த பெரிய பறவை அரிய வகை கழுகு என தெரியவந்தது. இப்பகுதியில் வந்து உணவு எதுவும் அருந்த கிடைக்காததால் அது பலவீனம் அடைந்து பறக்க முடியாமல் தவித்துள்ளதும் தெரியவந்தது.
உடன் கழுகுக்கு வனத்துறையினர் உணவு கொடுத்து தண்ணீர் குடிக்க வைத்தனர். பின்னர் கால்நடை உதவி மருத்துவர் அதனை பரிசோதனை பார்த்து எந்தவித காயங்களும் இல்லையென தெரிவித்தார். உடன் வனத்துறையினர் அந்த அரியவகை கழுகை பிடித்து கூண்டில் அடைத்து நெல்லை மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மலை பகுதியில் சுற்றி திரியும் அரிய வகை கழுகு பாதை மாறி இப்பகுதியில் வந்துள்ளது எனவும், மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் அதனை பரிசோதனை நடத்தி பாதுகாப்பான முறையில் மலை பகுதியில் விட ஏற்பாடு செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


