ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1995-1997ம் கல்வி ஆண்டில் 11 முதல் 12ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு வெள்ளி விழா நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி 142 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1995-1997ம் கல்வி ஆண்டில் 11 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவிகள் வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றினைந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு வெள்ளிவிழா நிகழ்ச்சியை இன்று பள்ளியில் வைத்து நடத்தினர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு தாங்கள் பயின்ற குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் இன்று குடும்பத்தோடு பங்கேற்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மட்டும் இன்றி அப்போது பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் அலுவலகப் பணியாளர்களையும் தற்போதைய ஆசிரியர்களையும் நிகழ்வில் பங்கேற்க செய்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
பின்னர், பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தியதுடன் வெள்ளி விழா நினைவாக பள்ளிக்கு சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் வழங்கியதுடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சியில், குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி கல்வி அபிவிருத்தி சங்க செயலாளர் சண்முகநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


