செய்துங்கநல்லூரில் வீட்டில் விளக்கேற்றிய போது சேலையில் தீப்பிடித்து ஓய்வு பெற்ற ஆசிரியை படுகாயம்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் நல்லபெருமாள் மனைவி முத்துலெட்சுமி(80). நல்லபெருமாள், முத்துலெட்சுமி ஆகிய இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவரது கணவர் நல்லபெருமாள் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.
தற்போது முத்துலெட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்துள்ளது. அதை கவனிக்காத அவர் அருகில் இருந்த கட்டில் படுத்துள்ளார். உடனே உடல் முழுவதும் தீ பிடித்துள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு படுகாயம் அடைந்த முத்துலெட்சுமியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே வந்து அவரை அங்கிருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


