திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா வரும் 31ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
இது குறித்துத் திருக்கோயில் இணை ஆணையர் ஆ. அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அன்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.
அதிகாலை 1:00 மணிக்குத் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். காலை 5:15 மணிக்குத் திருவிழா கொடியேற்றப்படுகிறது.
மாலை அப்பர் சுவாமிகள் திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்:
செப்டம்பர் 4 (ஐந்தாம் திருவிழா): இரவு 7:30 மணிக்கு மேலக் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று, சுவாமியும் அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருதல்.
செப்டம்பர் 5: காலை கோ ரதமும், இரவு வெள்ளி ரதமும் வீதி உலா வருதல்.
செப்டம்பர் 6 (ஏழாம் திருவிழா – சிவப்பு சாத்தி):
அதிகாலை 5:00 மணிக்குச் சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவை.
காலை 9:00 மணிக்குச் சுவாமி சண்முகப் பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்தடைதல்.
மாலை 4:00 மணிக்குச் சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா.
செப்டம்பர் 7 (எட்டாம் திருவிழா – வெள்ளை & பச்சை சாத்தி):
காலை 5:00 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் சுவாமி எழுந்தருளி வீதி வலம் வந்து மேலக்கோயில் சேருதல்.
நண்பகல் 12:00 மணிக்குச் சுவாமி பச்சைக்கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேருதல்.
செப்டம்பர் 9 (பத்தாம் திருவிழா – தேரோட்டம்): புதன்கிழமை காலை 7:00 மணிக்குச் சிகர நிகழ்வான புகழ்பெற்ற தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.


