1721 – ஈரானின் தப்ரீசு நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பை அறிவித்தார்.
1803 – பெருமளவு விண்வீழ்கற்கள் பிரான்சின் லாயிகில் நகரில் வீழ்ந்தன.
1805 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்னா நகரைக் கைப்பற்றினர்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் கூட்டமைப்புப் படையினர் வட கரொலைனாவின் டேரம் நகரில் கூட்டணியினரிடம் சரணடைந்தனர்.
1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.
1867 – கொழும்பிலிருந்து கண்டி வரையிலான முதலாவது தொடர்வண்டி சேவை நடத்தப்பட்டது.
1903 – அத்லெடிகோ மாட்ரிட் கால்பந்து கூட்டமைப்பு அணி உருவானது.
1923 – யோர்க் இளவரசர் எலிசபெத் போவ்சு லியோனைத் திருமணம் புரிந்தார்.
1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியாவில், கேர்னிக்கா நகரம் நாட்சிகளின் வான்படையினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1942 – மஞ்சுகோ நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 1549 சீன சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1943 – சுவீடன், உப்சாலா நகரில் உயிர்ப்பு ஞாயிறுக் கலவரம் ஆரம்பமானது.
1944 – ஜியார்ஜியோசு பப்பாந்திரேயு எகிப்தில் இருந்து நாடு கடந்த நிலையில் தன்னை கிரேக்கத்தின் அரசுத்தலைவராக அறிவித்தார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் நடத்தப்பட்டது.
1954 – இந்தோசீனா, மற்றும் கொரியாவில் அமைதியைக் கொண்டுவரும் முகமாக ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1960 – ஏப்ரல் புரட்சியை அடுத்து தென்கொரியாவின் அரசுத்தலைவர் சிங்மான் ரீ 12 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் பதவி விலகினார்.
1962 – நாசாவின் ரேஞ்சர் 4 என்ற ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.
1963 – லிபியாவில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1964 – தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.
1966 – தாஷ்கந்து நகரில் 5.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1981 – உலகில் முதல் தடவையாக திறந்த கருப்பை அறுவை சிகிச்சை அமெரிக்காவில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
1981 – ஈழப்போர்: மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1982 – தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1986 – சோவியத் ஒன்றியம், உக்ரைனில் செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
1989 – உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல் காற்று வங்காளதேசத்தின் நடுப்பகுதியைத் தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 வீடுகளை இழந்தனர்.
1994 – சப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 271 பேரில் 264 பேர் உயிரிழந்தனர்.
2005 – 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.


