தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் டாஸ்மாக் கடை அருகே உள்ள காலி இடத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயர்ந்து கிடப்பதாக திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். விபத்தில் உயிரிழந்தவர் யார் எனவும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் யார் எனவும் விசாரித்து வந்தனர்.
அப்போது லாரி ஓட்டுநர் விபத்து நடந்தது கூட தெரியாமல் லாரியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி போலீசார் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் தாமிரயூரணி கிழக்கு தெருவை சேர்ந்த முத்துச்சாமி மகன் பாலமுருகன் (42) என தெரியவந்தது.
அவர் உடன்குடி அனல் மின் நிலையத்திற்கு கிராவல் மணல் ஏற்றி கொண்டு சென்று விட்டு வந்து லாரியை நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு காலி இடத்தில் நிறுத்தியதாக தெரிவித்தார். மேலும் லாரி சக்கரம் ஏறி இறங்கி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த வாலிபர் யார் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் லாரி ஓட்டுனருக்கு தெரியாமல் இருந்தது திருச்செந்தூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


