முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
விடுமுறை தினங்கள் மற்றும் திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
இந்த நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூருக்கு சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் அதிகாலை முதலே கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் குளித்து விட்டு நீண்ட வரிசையில் நின்று குடும்பத்தினருடன் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேர்த்திக்கடனாக வரும் பக்தர்கள் அலகு குத்தியபடி குடும்பத்துடன் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விடுமுறை தினத்தில் ஒரு சில திருமணங்கள் நடந்தது.
இதனால் பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் முதியவர்கள் செல்லும் தனி வழியில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. மேலும் திருச்செந்தூர் கோவில் வளாக பகுதி, பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.


