குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் திருவிழா முடிந்து 2 நாட்களில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தென்திருப்பேரை அருகே குரங்கணியில் உள்ள முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.
இந்த கோவிலில் அன்னதான உண்டியல் உள்பட 11 நிரந்தர உண்டியல்களும், தற்போது நடந்த திருவிழாவுக்காக 6 தற்காலிக உண்டியல்களும் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலையில் பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலை திறந்தார். அப்போது, அங்குள்ள நாராயணர் சன்னதி, துர்க்கையம்மன் சன்னதி முன் வைக்கப்பட்டு இருந்த 2 தற்காலிக உண்டியல்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தார்.
அப்போது, கோவிலுக்கு வடக்கு பகுதியில் 2 உண்டியல்களும் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தன. இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள், கோவிலில் தூணில் கயிறு மூலம் கட்டப்பட்டு இருந்த 2 தற்காலிக உண்டியல்களை தூங்கிச் சென்றனர். பின்னர் உண்டியல்களை உடைத்து அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்துச் சென்றதும், நாணயங்களை அப்படியே உண்டியல்களில் போட்டுவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உண்டியல்களின் பதிவான ரேகைகளையும், தடயங்களையும் சேகரித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல்களில் சுமார் ரூ.2 லட்சம் வரை பணம் இருந்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். குரங்கணி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


