தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் இணைந்து பாளை மாவட்ட மைய நூலகத்தில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் பிறந்தநாள் விழா, கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் விழா, செந்நாப் புலவர் பேராசிரியர் கார்மேகனார் நினைவு நாள் விழா, மாணவ மாணவிகளுக்குப் பாராட்டு விழா மற்றும் மூன்று நூல்கள் அறிமுக விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் கல்வியாளர் அ.மரியசூசை தலைமை தாங்கினார். வாசகர் வட்டத் துணைத்தலைவர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, கவிஞர் சு.முத்துசாமி, ஆ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநகர காவல் துணை ஆணையாளர் எஸ்.விஜயகுமார் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்பறையாற்றினார். செந்நாப்புலவர் கார்மேகனார் குறித்து கவிஞர் புத்தனேரி கோ.செல்லப்பா, நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் குறித்து கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் , கவியரசு கண்ணதாசன் குறித்து முனைவர் திருக்குறள் இரா.முருகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கல்லிடைக்குறிச்சி வாசகர் வட்டத் தலைவர் திருவருள் லத்தீப், மின்வாரியத்தில் பணியாற்றி காலம் சென்ற ஆர்.சங்கரநாராயணன் அவரது துணைவியார் ஆசிரியயை முத்தம்மாள் ஆகியோர் சார்பாக ஓய்வு பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துராமன் ஆகியோர் ரூபாய் ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலர் ஆனார்கள்.
1330 குறளையும் பயன்படுத்தி 33 அடியில் திருவள்ளுவரை ஓவியமாக வரைந்த மாணவி வர்ஷினி பாராட்டப் பெற்றார். கவிஞர் ஜெயபாலன் எழுதிய கடனதிகாரம் என்ற நூலை கவிஞர் சக்தி வேலாயுதமும் தமிழ்செம்மல் கவிஞர் பாமணி எழுதிய பேச்சுக்கலையும் அதில் வெற்றி பெறும் உத்திகளும் என்ற நூலை பேராசிரியர் அந்தோணி ராஜும் கவிஞர் செ.ச.பிரபு எழுதிய சொல்வது யாதெனின் என்ற நூலை முனைவர் சரவணகுமாரும் திறனாய்வு செய்து பேசினார்கள்.
முனைவர் திருக்குறள் இரா முருகன் தலைமையில் ‘கண்ணதாசன் – ஒரு பாடல் ஒரு பொருள்’ என்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தளவாய் மாடசாமி, திருக்குறள் பிரபா, சமுத்திரம், மாணிக்கவாசகம், மணிமாலா, சிற்பிபாமா ,சிவ.செல்வமாரிமுத்து, கோபாலகிருஷ்ணன், பாசியம், பொன்னம்மாள், தியாகராஜன், நல்லாசிரியர்கள் நடராஜன், ராஜேந்திரன், உடையார், புன்னைச்செழியன், பாத்திமா, பேராசிரியைஅனுசியா, ஆறுமுகம், ஆதிமூலம், தச்சை மணி, மேகலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பொதிகை எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் லோகநாதன், சமூக சேவையாளர் பொன் முருகன், எழுத்தாளர் காயல் அருள், தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் தம்பான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நூலகர்கள் மகாலட்சுமி, அகிலன் முத்துக்குமார், முத்துலட்சுமி, ராஜேஸ்வரி, சீனிவாசன், சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நூலகர் கண்ணுப்பிள்ளை நன்றி கூறினார்.


