கோவில்பட்டியில் நீதிமன்ற ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புது அப்பனேரி பகுதியைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் (37), இவர் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் பணி செய்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி இரவு அவர் வேலை முடிந்து கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்தார்.
நடராஜபுரம் செல்வதற்காக தண்டவளத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த மணிபர்சை பறித்துச் சென்றுவிட்டார். இது குறித்து அரிச்சந்திரன் தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், வழிப்பறியில் ஈடுபட்டது கோவில்பட்டி நடராஜபுரம் ஐந்தாவது தெருவை சேர்ந்த காளிராஜ் மகன் லட்சுமணன் (18) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.


