பொதிகை மலையில் வன விலங்குகள் இருக்கும் காட்டில் தனியாக வாழும் 110 வயது மூதாட்டி ஒருவரை பற்றி நாம் ஏற்கனவே பேசி வருகிறோம். நம்முடைய நூலில் அதைப்பற்றி எழுதியும் வருகிறோம். அந்த மூதாட்டி அடர்ந்த காட்டுக்குள் தன்னந் தனியா வாழ்ந்து வருகிறார். அவர் தற்போது உடல் நலம் குன்றி வாழ்ந்து வருகிறார். ஆனாலும் ஊருக்குள் வர மறுக்கிறார். இயற்கையை நேசிக்கும் இவரை நினைத்துப்பார்த்தாலே ஆனந்தம் தான்.-
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையின் உச்சியில் பூங்குளம் பகுதியில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிறது.
மலையில் பாய்ந்தோடும் நீரோடைகள் பாபநாசம் காரையாறு அணையை வந்தடைகின்றன.
காரையாறு அணை அருகில் அகஸ்தியர் காலனி குடியிருப்பு, சின்ன மைலார், பெரிய மைலார், சேர்வலாறு, இஞ்சிக்குழி உள்ளிட்ட இடங்களில் காணி இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.
காரையார் அணைக்கு மேலே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் பொதிகை மலை உச்சியின் அடிப்பகுதியில் இஞ்சிக்குழி கிராமம் உள்ளது.
முன்பு இங்கு 40 குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது 3 குடும்பத்தினர் மட்டுமே வசிக்கின்றனர்.
அதில் குட்டியம்மாள் (வயது 110) என்ற மூதாட்டி மட்டும் தார்ப் பாயாலான வீட்டில் தனியாக வசிக்கிறார். மற்ற குடும்பத்தினர் வேலைக்காக காரையாறு அணை அடிவாரத்துக்கு சென்று விட்டு, அவ்வப்போது இஞ்சிக்குழி வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதியான இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலை, தொலைத்தொடர்பு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது.
இஞ்சிக்குழியில் அடர்ந்த காட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டி குட்டியம்மாளுக்கு கடந்த 2021- ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அவர்கள் முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும் அவரது வீட்டுக்கு சோலார் மின்வசதி அமைத்து கொடுத்தார்.
காரையார் தபால் அலுவலகத்தில் இருந்து தபால் அலுவலர் மாதந்தோறும் இஞ்சிக்குழிக்கு நடந்து சென்று உதவித் தொகை வழங்கி வருகிறார்.
தற்போது குட்டியம்மாள் வயது முதிர்வு காரணமாக சரிவர நடக்க முடியாததால் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். காரையாறில் உள்ள ரேஷன் கடைக்கும் சென்று உணவுப்பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளார்.
இதுகுறித்து மூதாட்டி குட்டியம்மாள் பேசிய பேச்சு வைரலாக பரவி வருகிறது ”இஞ்சிக்குழியில் 40 குடும்பத்தினர் வசித்த நிலையில் தற்போது நான் மட்டுமே வசிக்கின்றேன். இங்கு எந்த வசதியும் இல்லாததால் பலரும் மலையடிவாரத்துக்கு சென்று விட்டனர். 2 குடும்பத்தினர் மட்டும் தங்களது குடியிருப்புகளுக்கு அவ்வப்போது வந்து செல்வார்கள்.
யானைகளின் பிளிறல் சத்தத்தைக் கேட்டுதான் காலையில் கண்விழிப்பேன். சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் இயல்பாக சுற்றி திரியும்.
வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளை சாப் பிடுகிறேன். ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறியதாக செய்திகள் பரவி வருகிறது.
இதற்கிடையில் பாட்டியை கீழே கூட்டி வாருங்கள் என்று ஒரு சாரரும், நல்ல காற்று, இயற்கை, வனவிலங்குடன் வாழ்க்கை வாழும் அந்த பாட்டியை அங்கேயே நிம்மதியாக வாழ விடுங்கள். அவர் அந்த மூச்சு காற்றுடன் கூடுதலாக பலவருங்களாக உயிரோடு வாழ்வார். கீழே கொண்டு வந்துவிட்டால் அவர் உயிர்போய்விடும் என் றெல்லாம் பேசி வருகிறார்கள்.
பேசும் பொருளான பாட்டி தாமிரபரணியின் கரையில் வாழும் தெய்வம். மக்களை திரும்பி பார்க்க வைத்திருக்கும் அபூர்வ மங்கை. அவரை வாழ்த்தலாம்.
ஆனால் பாட்டியோ இயற்கையோடு இங்கே ஒன்றி வாழுகிறேன். என்னை விட்டு விடுங்கள் கடைசி வரை இங்கேயே வாழ்ந்து விடுகிறேன் என்கிறார்.
இவரது இந்த செயல் நமக்கு சந்தோசத்தினையே வரவழைக்கிறது.
தற்போது காட்டை நேசிக்கும் வனத்துறை அதிகாரியாக இளைய ராஜா பணியாற்றி வருகிறார். இவர் நான்வசிக்கும் செய்துங்கநல்லூரில் பிறந்தவர். அவர் நாங்கள் தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணி நடக்கும் போது வேண்டிய உதவியை செய்து வருபவர். அதோடு மட்டுமல்லாமல் எங்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருபவர்.
செய்துங்கநல்லூரில் உள்ள நூலகத்தினை வாசகர் வட்டம் மூலமாக இலவச பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிட்டோம். செய்துங்கநல்லூரை சுற்றி உள்ள சுமார் 42 கிராமத்தினை சேர்ந்த மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள். இவர்கள் அரசு தேர்வுக்கு பயிற்சி எடுக்க வேண்டும் என்றால் பாளையங்கோட்டை போன்ற பகுதிக்கு அகடாமிக்கு வரவேண்டும்.
இவர்கள் அகடாமிக்கு பணம் கட்டித்தான் படிக்க வேண்டும். எனவே இவர்களுக்கு இலவச அகடாமி நடத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
இதற்கிடையில் செய்துங்கநல்லூர் அரசு நூலகத்துக்கு கனி மொழி அவர்கள் மூலமாக நூலக கட்டிடம் ஒன்று கிடைத்தது. மேலும் மத்திய அரசு மூலம் கூடுதலாக ஒரு நூலக கட்டிடம் கிடைத்தது. ஏற்கனவே நான் மணி நாடார் எம்.எல். ஏ விடம் உதவியாளராக இருந்த போது ஒரு கட்டிடம் கட்டியிருந்தோம்.
தற்போது அந்த கட்டிடம் காலியாகி விட்டது. எனவே அந்தஇடத்தில் ஒருஇலவச அரசு தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தலாம் என திட்டமிட்டோம். ஏற்கனவே ஊர்வசி இலவச அகடாமி ஒன்று ஸ்ரீவைகுண்டத்தில் நடந்து வருகிறது. அதை ஸ்ரீவைகுண்டம் எம்.எல். ஏஊர்வசி அமிர்தராஜ் நடத்தி வருகிறார். அவரிடம் வகுப்பு நடத்த ஆசிரியரை தாருங்கள் என கேட்டுள்ளோம்.
மேலும் தற்போது எங்கள் நூலகத்துக்கு அரசு பெஞ்ச், டேபிள் போன்றை தந்துள்ளனர். எனவே விரைவில் இலவச அரசு தேர்வுக்கான பயிற்சி மையம் ஆரம்பிக்க உள்ளோம்.
அதற்கு எங்கள் மண்ணின் மைந்தன் இளையராஜா அவர்களிடம் உதவி கேட்டேன். அது சம்பந்தமாக நூல் மற்றும் வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருகிறேன் என உறுதி அளித்தார்.
மேலும் நான் எழுதும் திருநெல்வேலி மாவட்ட வரலாறு நூலுக்கு வாழ்த்துரை தரவும் இசைந்துள்ளார். மதுரை உயர்நீதி மன்றத்துக்கு சென்றவர் , என்னை காண அம்பை செல்லும் வழியில் நெல்லை வனத்துறை அலுவலகத்துக்கு வந்த சென்ற அவரின் அன்புக்கு எப்படி நன்றி கூறுவேன்.
( நதி வற்றாமல் ஓடும்)


