திருச்செந்தூர் பகுதியில் சுதந்திர போராட்டம் பரபரப்பாக நடந்த வேளை.
நீதிக்கட்சி காரர்கள் விடுதலையே வேண்டாம் என்று பேசி வந்தனர். திருச்செந்தூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் அருணகிரி முதலியார். இவரும் விடுதலையே வேண்டாம் என் பேசி வந்தார். விடுதலை போராட்ட காரர்கள் மீது கோபம் கொண்டிருந்தார். அதுவும் பள்ளி மாணவர்கள் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டால் பயங்கரமான தண்டனை கொடுத்து வந்தார்.
அதே பள்ளியில் பல தேசபக்தி கொண்ட ஆசிரியர்களும் இருந்தனர்.
அதில் முக்கியமானவர்கள் நடராஜ பிள்ளை, பிரம்ம நாயக பிள்ளை போன்றவர்கள்.
அவர்கள் மேகநாதன் போன்ற மாணவர்களுக்கு உற்சாகம் கொடுத்து வந்தனர். விடுதலை போராட்டத்தின் முக்கியத்துவத்தினை அவர்களிடம் எடுத்துரைத்து வந்தனர். அவர்கள் போராட வேண்டும் என சுதந்திர தாகத்தினை கூட்டி வளர்த்தனர்.
தங்களுக்கு எதிராக இருக்கும் தலைமை ஆசிரியர் மீது இந்த ஆசிரியர்களுக்கு கடும் கோபம் இருந்தது. இதை மேகநாதனிடம் சொல்லி குறைப்பட்டு கொண்டனர். இதனால் தலைமை ஆசிரியர் மீது மேகநாதனுக்கு வெறுப்பு ஏற்பட்டது.
“தங்கள் திருநாட்டில் வாழ்ந்து கொண்டு வெள்ளையனுக்கு உதவியாக கொடி பிடிக்கும் இது போன்றவர்களை சும்மா விடக்கூடாடது” என கோபம் கொண்டனர் ஆசிரியர்கள். அதை மேகநாதன் மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தனர்.
எனவே எப்படியாவது தலைமை ஆசிரியருக்கு எதிர்ப்பு காட்ட வேண்டும் என மேகநாதன் நினைத்தான்.
ஆசிரியர்கள் நடராஜ பிள்ளையிடமும், பிரம்மநாயக பிள்ளையிடமும், “என்ன செய்யலாம்?” என கேட்டான்.
அவர்கள் தலைமை ஆசிரியர் மீது எதிர்ப்பை காட்டினார்களே தவிர, தலைமை ஆசிரியர் கீழ் வேலை பார்ப்பதால் அமைதியாகவே இருந்தனர். மனதுக்குள் அவர் மீது கோபம் இருந்தாலும் அதை வெளிகாட்ட தயங்கினர். எனவே மேகநாதனிடம் எதுவும் பேசவில்லை.
ஆனால் மேகநாதன் விடவில்லை. மனதுக்குள் திட்டம் போட்டுக்கொண்டே இருந்தான்.
அவன் மனதுக்குள் எப்படியாவது தலைமை ஆசிரியருக்கு எதிர்ப்பு காட்டவேண்டும் என்று துடித்தான்.
அதற்கான நாளும் வந்தது.
ஒருநாள். பள்ளியை விட்டு அனைவரும் கிளம்பினார்கள். தோளில் பையை போட்டுக்கொண்டு வெளியே வந்தான் மேகநாதன்.
எதிரே தலைமை ஆசிரியர் அருணகிரி முதலியார் பிரம்பை கையில் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
மேகநாதன் கண்கள் சிவந்தது. “என்ன செய்யலாம். அன்று வீட்டுக்கு சென்றவன் மனதில் தலைமை ஆசிரியர் உருவமே வந்து சென்றது.
சூரியன் மறைந்தது. இருள் சூழ்ந்தது. அவன் மனதுக்குள் திட்டம் ஒன்று உருவானது.
பள்ளி தலைமை ஆசிரியரை கேவலப்படுத்த வேண்டும். எப்படி?
அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் கிடந்த கரிக்கட்டையை எடுத்தான். அதன் பின் பள்ளி அருகே வந்தான். கூ இருட்டாக இருந்தது. வெண்மை நிறத்தில் பள்ளி சுற்றுப்புறச்சுவர் பளிச்சென்று இருந்தது.
பள்ளி சுவரில் எழுத ஆரம்பித்தான்.
“தலைமை ஆசிரியர் ஒழிக!”
ஒரிடத்தில் இரு இடத்தில் என இல்லை. தொடர்ந்து பத்து தடவைக்கு மேல் சுவரில் தலைமை ஆசிரியர் ஒழிக என கிறுக்கி வைத்தான்.
அக்கம் பக்கம் பார்த்தான். யாரும் பார்க்க வில்லை.
அதன் பின் வீட்டுக்கு சென்று நிம்மதியாக படுத்து தூங்கினான்.
மறுநாள் விடிந்தது.
குளித்து முடித்து விட்டு, பள்ளி பையை தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு பள்ளிக்கு வந்தான் மேகநாதன்.
அங்கே சுவரை சுற்றி நிறைய மாணவர்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அனைவருக்கும் சந்தோசம். அது அவர்கள் முகத்தில் தெரிந்தது.
தலைமை ஆசிரியரை எதிர்த்து எழுதி வைத்த அந்த தைரியசாலி யார் என்று எண்ணி வியந்த நின்றனர்.
தலைமை ஆசிரியருக்கு தகவல் பறந்தது.
வேகமாக அந்த இடத்துக்கு வந்தார் தலைமை ஆசிரியர் . “எழுதி வைத்தது யார்?” கோபமாக கேட்டார்.
யாருக்கு தெரியும். நேற்று இரவு இருட்டில் நடந்த சம்பவம் அல்லவா? யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கம்பீரமாக நின்று கர்ஜிக்கும் தலைமை ஆசிரியர்முன்பு கூட யாரும் நிற்க முயலவில்லை. யார் அவருக்கு பதில் சொல்வார். அனைவரும் விலகி சென்றனர். யாரும் பதில் சொல்லவில்லை.
பியூனை கூப்பிட்டார். “இந்த எழுத்தையும், பள்ளிக்கூடத்தில் உள்ள மாணவர்கள் கட்டுரை நோட்டில் எழுதி இருக்கும் எழுத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவன் யார் என்று கண்டு பிடித்து அவனை விட்டே இந்த எழுத்தை அழிக்கச்செய்கிறேன்” என்று கொதித்தெழுந்தார்.
அங்கு நின்ற மாணவர்களை விளையாட்டு ஆசிரியர் வந்து விரட்டினார். வேடிக்கை பார்த்தவர்களுக்கு பிரம்படி விழுந்தது.
அனைவரும் அங்கிருந்து ஓடினார்கள். கட்டுரை நோட்டு உள்பட மாணர்வர்கள் எழுதிய நோட்டுகள் தலைமை ஆசிரியர் அறையில் கொண்டு அடுக்கி வைக்கப்பட்டது.
அவருக்கு ஆதரவான வாத்தியார்கள் அந்த எழுத்தை ஒப்பிட்டுப் பார்த்து தேடினார்கள்.
தலைமை ஆசிரியருக்கு கோபம். தனது அறையில் அவர் இருந்து இருந்தாலும் மனது எல்லாம் பதைபதைத்துக் கொண்டிருந்தது.
“யார் இவன்? எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி எழுதியிருப்பான்”.
அவருக்கு கோபம் கோபமாக வந்தது.
மேகநாதன் சும்மா இருக்கவில்லை. என்ன செய்கிறார்கள். தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது. எப்படி கண்டு பிடிக்கிறார்கள். அதையெல்ல்£ம் பார்க்க வேண்டும். எனவே தைரியமாக தலைமை ஆசிரியர் அறைக்கு கட்டுரை நோட்டு எடுப்பவன் போல வந்தான்.
அவனை பார்த்தவுடன் தலைமை ஆசிரியருக்கு பொறி தட்டியது.
இந்த குள்ளன் தான் இப்படி செய்து இருப்பான். அதுதான் இங்கு நடக்கும் பிரச்சனையில் தையிரியமாக வேவு பார்க்க வந்திருக்கிறான்.
முடிவு செய்தார்.
“மேகநாதா” என அழைத்தார்.
“என்ன சார்? என்ன விசேஷம்?” என முன்னால் போய் நின்றான் மேகநாதன்.
“நீ தானே சுவற்றில் எழுதினாய்” என்றார்.
மேகநாதன் அமைதியாக நின்றான்.
“இந்தப் பள்ளியில் இதைச் செய்ய வேண்டுமென்றால் நீ தான் செய்திருப்பாய்! அதை உடனே அழி” என்றார்.
மேகநாதன் அமைதியாக நின்றான்.
“என்னலே நான் சொல்லுறேன் உன் காது கேக்கலை. நீ தானே எழுதுனே” என்றார். தலைமை ஆசிரியர்.
மீண்டும் அமைதியாக நின்றான் மேகநாதன்.
“ஏடேய் இந்த காரியத்தை உன்னை விட வேறு யாரும் செய்ய இயலாது. எனக்கு கோபம் வரும் முன் அழித்து விடு. இல்லை கெட்ட எம தர்மான மாறிருவேன்” என்று கத்தினார்.
மேகநாதன் கண்டு கொள்ளவே இல்லை.
விளையாட்டு ஆசிரியர் வந்தார். “ஏலேய் அவரு கோபமா இருக்காரு. பிரம்பு வேறே வச்சிருக்காரு. அடிச்சா தாங்க மாட்ட. பேசமா அழிச்சிரு” என்றார்.
மேகநாதன் தீர்க்கமாக சொன்னான். “முடியாது சார்வாள்” .
கோபம் கொண்ட தலைமை ஆசிரியர் பிரம்பை தூக்கிக்கொண்டு வந்தார்.
மேகநாதனை உரித்து எடுக்க ஆரம்பித்தார்.
அடி தாங்காமல் அலறுவான் என நினைத்தார்கள். ஆனால் அவன் அப்படியே நின்றான்.
“என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். சுவர் எழுத்தை அழிக்கவும் மாட்டேன். எழுதி இருப்பது உண்மைத்தான். தலைமை ஆசிரியர் ஒழிக என்றால் ஒழிக தான்” மனதுக்குள் தீர்க்கமாக நினைத்தவன் அமைதியாக நின்றான்.
கல்லுரி மங்கன் எப்படி நிக்கிறான் பாரு.
பிரம்பு அடிக்க அடிக்க மொரிந்தது. ஆனால் மேகநாதன் தீர்க்கமாக நின்றான்.
கண்ணீர் வரவில்லை.
“இந்த நாடு நம் நாடு. இந்த நாட்டில் அன்னிய பரங்கி தலையன் ஆண்டுக்கொண்டிருக்கிறான். அவனை விரட்ட போராடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் விடுதலை வேண்டாம் என்று போராடும் நீங்களும் கயவர்கள்தான். ஆகவே உங்களை ஒழிக என்று எழுதி வைத்தது வைத்ததுதான். ஆனால்அதை நான் அழிக்க மாட்டேன்”. பேச ஆரம்பித்தான் மேகநாதன்.
தலைமை ஆசிரியர் விக்கித்து போய் நின்றார். இந்த சின்ன வயதில் இப்படி தீர்க்கமான முடிவு எடுக்கிறானே என அதிர்ந்து நின்றார்.
அடித்து அடித்து கை வலித்து போனது. சோர்வுடன் தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்தார்.
பியூனை கூப்பிட்டார். “அவன் அழிக்கமாட்டான்டா. மானம் போவுது. நீ போய் அதை அழி” என அவனிடம் கூறினார்.
அங்கு நடக்கும் பிரச்சனை பெரிதாக கூடாது என்பதால் ஓடிப்போய் சுவரில் எழுதப்பட்டதை அழித்தான் பியூன்.
இந்த பிரச்சனையை பற்றி கவலைப்படாமல் யாரை கண்டும் பயப்படாமல் தைரியமாக நின்றுகொண்டிருந்தான் மேகநாதன்.
இப்போது மேகநாதனை பார்க்கும் போது அனைவருக்கும் பயம் வந்தது. அவனின் மனது வலிமை அனைவரையும் யோசிக்க வைத்தது.
அன்று சாயங்காலம் வரை அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருந்தான் மேகநாதன். அவனுக்கு இந்த பிரச்சனை பெரிய பிரச்சனையாக தெரியவில்லை.
சாயங்காலம் பெல் அடித்தவுடன் புத்தக பையை தூக்கி போட்டுக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.
****
விடுதலை போராட்டத்துக்கு தலைமை ஆசிரியர் போன்ற பலர் எதிர்ப்பாகவே இருந்தார்கள்.
எனவே வெள்ளையனையும் எதிர்க்க வேண்டும். அதே நேரத்தில் விடுதலை போராட்டத்துக்கு எதிர்பாக இருப்பவர்களையும் எதிர்க்க வேண்டும். எனவே இரட்டை போராட்டம் நடத்த தேவை இருந்தது.
மேகநாதன் மாணவர்களை சேர்த்துக்கொண்டு போராட தயாரானான்.
தலைமை ஆசிரியர் பிரச்சனைக்கு பிறகு , இவனுக்கு உதவ நிறைய மாணவர்கள் திரண்டனர். அவர்கள் போராடவும் தயார் ஆனார்கள். விடுதலை வேண்டும். அதை எதிர்க்கும் நம்மவர்களுக்கும் எதிர்ப்பு காட்ட வேண்டும் என்று நினைத்தனர்.
இந்த வேளையில் தான் திருச்செந்தூரில் ஒரு சம்பவம் அறங்கேறியது.
“இந்நாட்டிற்கு விடுதலையே தேவை இல்லை, வெள்ளையர்கள் இந்நாட்டை விட்டுப் போகக் கூடாது” எனப் பிரசங்கம் செய்ய சிலர் திருச்செந்தூரில் உரையாற்ற வருகிறார்கள் எனச் செய்தி மேகநாதனுக்கு கிடைத்தது.
அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென மேகநாதன் முடிவு செய்தான்.
குறிப்பிட்ட நேரம் வந்தது.
திருச்செந்தூர் பஜாரில் வெள்ளையனுக்கு ஆதரவாளர்கள் கூடினர். அவர்கள் பிரசங்கத்தினை ஆரம்பித்தனர்.
அந்த சமயத்தில் மிகப்பெரிய கூட்டமாக மேகநாதன் தலைமையில் மாணவர்கள் கூட்டத்தின் முன் திரண்டனர். எதிர்கோஷம் போட்டனர்.
“வெள்ளைனே வெளியேறு”.
“வெள்ளையனே வெளியேறு”.
“வெள்ளையினின் கைகூலியே வாயை மூடு” என்று கோஷமிட்டனர்.
தீடீரென்று மாணவர்கள் கூட்டமொன்று மேடை முன் நின்று கோஷம் போட்டதை கண்டவர்கள் அதிர்ந்தனர்.
மேடையில் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இதற்கிடையில் போலிசார் அங்கே வந்தனர். அப்போது தாசில்தாராக இருந்தவர் மாசிலாமணி நாடார். மிகவும் கண்டிப்பானவர். அரசுக்கு விசுவாசமானவர். அதே வேளையில் நமது இளைஞர்கள் பாதிக்க கூடாது என்று நினைத்தார். ஆனால் மேகநாதன் படுத்தும் பாடு அவருக்கு பெரும் தலை வேதனையை கொடுத்தது.
அதோடு மட்டுமல்லாமல் மேகநாதன் செய்யும் பிரச்சனை தலைமை ஆசிரியர் மூலம் அரசுக்கு தெரிந்து இருந்தது. எனவே இதுபோன்ற மாணவர்களை மூளையிலே கிள்ளிப்போட வேண்டும் என நினைத்தது அரசு.
ஆகவே தாசில்தார் மூலமாக மேகநாதனை பிடிக்க திட்டமிட்டனர். இந்த சமயத்தில் தான் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாச நாயுடுவை அழைத்தார்.
தாசில்தார் அறைக்கு சப்&இன்ஸ்பெக்டர் வந்தார்.
“மிஸ்டர் சீனிவாச நாயுடு. மேகநாதன் வளரும் போதே போராட்ட காரனாக வளருகிறான். அதோடு மட்டுமல்லாமல் மாணவர்கள் பலரை திசை திருப்ப காரணமாக இருக்கிறான். அவனை தலையில் தட்டி வைக்கவேண்டும்”.
சப் இன்ஸ்பெக்டர் சொன்னார். “அய்யா. அவன் மோசமான ஆளு என கேள்விப்பட்டேன். பெரிய இடத்து பிள்ளை வேறு. அவனை தண்டிக்காமல் விடவும் முடியாது. அதே வேளையில் தண்டித்தால் அவன் உறவு காரர்கள் மூலமாக நமக்கு பிரச்சனை ஏற்படும். போராட்ட காரர்களும் நம்மை நோக்கி சீறிக்கொண்டு வருவார்கள்” என்றார்.
“மிஸ்டர் சீனிவாச நாயுடு. எதைப்பற்றியும் கவலைப்படக்கூடாது. அவனை சுட்டு பிடியுங்கள்”. தாசில்தார் ஆக்கிரோஷமாக சொன்னார்.
“அய்யா”.
“ஆம். அவன் நமக்கு உயிரோடு வேண்டும். அதே வேளையில் அவனை காயப்படுத்தாமல் பிடிக்க முடியாது. எனவே முட்டுக்கீழ் சுட்ட பிடியுங்கள்” என்றார்.
சப் இன்ஸ்பெக்டர் யோசித்தார்.
“அய்யா அப்படியென்றால் அதற்கான ஆணையை நீங்கள் தரவேண்டும்”.
“உடனே இப்போதே தருகிறேன்”.
கிளார்க்கை கூப்பிட்டார். மேகநாதன் உள்பட கலவரத்தில் ஈடுபடும் மாணவர்களை சுட்டுப்பிடிக்க ஆணை 10 நிமிடத்தில் தயார் ஆனது. தாசில்தார் அதில் கையெழுத்து வைத்து சப் இன்ஸ்பெக்டர் கையில் கொடுத்தார்.
ஆணையை கையில் வைத்துக்கொண்டு நாயுடு கிளம்பினார்.
நாயுடுவுக்கு மனதுக்குள் வேதனையாக இருந்தது. சிறுவன். ஏதோ யாரோ துண்டி விடுகிறார்கள். ஆகவே கொதித்து எழுந்து இருக்கிறான். “நமது நாடு அன்னியர்களிடம் சிக்கி உள்ளது என்பதனால் தானே இப்படி செய்கிறான். போகட்டும் அவனை விட்டு விடலாம்” என நினைத்தார்.
ஆனால் பிரச்சனையோ வேறு மாதிரி கிளம்பியது.
திருச்செந்தூரில் நடந்த கூட்டத்தில் வந்து மாணவர்களை கலைந்து போகச்சொல்லி நாயுடு கூறினார்.
யாரும் கேட்கவில்லை. மாறாக பரங்கியர்களின் ஆதரவாளர்களை பேச விடாமல் முற்றுகையிட்டனர்.
போலிஸ் வந்து விட்டது என்று தெரிந்தவுடன் மேடையில் நின்றவர்கள் தைரியமாக தொடர்ந்து பேச ஆரம்பித்தனர்.
ஆனால் சிறுவர்கள் கூட்டம் கையில் கல்லை எடுத்துக்கொண்டு பேசினால் எறிந்து விடுவோம் என்று மிரட்டிக்கொண்டு நின்றார்கள்.
சப்இன்ஸ்பெக்டர் நாயுடு அவர்களை மறித்தார்.
மேகநாதன் கூறினான். “சார். எங்கள் உயிரே போனாலும் சரி. பரங்கியர்களுக்கு துணை போகும் இதுபோன்ற புல்லுரிவிகளை நாங்கள் பேச விட மாட்டோம்”. என்று சொல்லிக்கொண்டு மாணவர்களுக்கு முன்னால் வந்து நின்றான்.
மேகநாதன் மீது கோபம் கொண்டார் நாயுடு. “டேய் மேக நாதா நீ சிறுவன். உனக்கு பிரச்சனை தெரியாது. இங்கிருந்து போய் விடு. அரசு நடவடிக்கை எடுத்தால் நீ தாங்க மாட்டாய்” என்றார்.
“என்ன சார் நடவடிக்கை எடுப்பீர்கள்? எங்களை லத்தி சார்ச் பண்ணுவீர்கள். அப்படித்தானே பண்ணுங்கள். நாங்கள் தாங்க தயாராக இருக்கிறோம்” என்றான் மேகநாதன்.
நாயுடுவுக்கு எரிச்சல் வந்தது. “நாமோ இந்த சிறுவனை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் இவனோ கிறுக்குதனம் செய்கிறான். சூட்டிங் ஆடர் வைத்திருக்கிறேன் என்பது இவனுக்கு எங்கே தெரியும்”.
மனதுக்குள் நினைத்தவர். வெளிப்படையாக பேசினார்.
“டேய் மேக நாதா. நீ நினைக்கிற மாதிரி இது லேசுபட்ட காரியம் இல்லை. தாசில்தார் மாசிலாமணி நாடார் உன்னை சுட்டு பிடிக்க ஆடர் போட்டு விட்டார்” என்றார்.
“ஆ. கா. நாங்கள் என்ன கொக்கா எங்களை சுட்டிப்பிடிக்க. நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். எங்கள் மண்ணின் கொல்லை புறம் வழியாக வந்து ஆட்சியை பிடித் தவர்கள் பரங்கியர்கள். அவர்களுக்கு கொடி பிடித்துக் கொண்டு அழையும் அறிவிலிகள் நீங்கள். எங்களை சுட்டுப்பிடிக்கப்போகீறீர்களா? அதையும் பார்ப்போம்” என்றான்.
தேசிய கொடியை கையில் பிடித்துக்கொண்டு “வந்தே மாதரம்” என முழங்கிய படி அந்த மேடையை அனைவரும் சுற்றி நின்றனர்.
சுதந்திரப்போராட்டத்தில் பெரியவர்கள் ஈடுபட்டு பார்திருக்கிறார் நாயுடு. ஆனால் இங்கோ அனைவரும் சிறுவர்கள். அவர்களை அடித்தால் அப்படியே மயங்கி சரிந்து விடுவார்கள். என்ன செய்வது என்பது புரியவில்லை. எனவே சூட்டிங் ஆடர் ஒரு பக்கம் இருக்கட்டும். இவர்களை அடித்து துறத்துவோம் என முடிவு செய்தார்.
“லத்தி சார்ஜ்” என சத்தம் கொடுத்தார். அவ்வளவு தான் போலிஸ் படை மாணவர்களை சுற்றி வளைத்தது. முட்டுக்கு கீழே உறித்து எடுத்தார்கள். அடி தாங்க முடியாமல் சிறுவர்கள் அலறினர். இவர்கள் அலறிய அலறலில் பேச வந்தவர்கள் மேடையை விட்டு இறங்கி ஓடிப்போய் கடற்கரையில் நின்று கொண்டனர்.
மாணவர் படை அங்கும் இங்கும் சிதைந்து ஓடியது. போலிசார் மாணவர்களை விரட்டி விரட்டி அடித்தனர். மேகநாதனுக்கு பலத்த அடிபட்டது. அவன் கடற்கரை வழியாக ஓடி அமலி நகருக்கு வந்தான். அதன் பின் அவனால் நடக்க முடியவில்லை. ஒரிடத்தில் படுத்து விட்டான்.
மாணவர்களை கலைத்து விட்டோம் என்ற இறுமாப்புடன் வந்த நாயுடு, மனதுக்குள் நல்லவேளை சுட்டு பிடித்து அந்த பாவத்தினை நாம் ஏற்கவில்லை என மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.
பேச்சாளர்களை பார்த்தார். “இனி பிரச்சனை இல்லை. மேடைக்கு வாருங்கள் வந்து பேசுங்கள்” என்றார்.
அதே வேளையில் மேகநாதனின் நண்பர்கள் மற்றொரு வழியில் வந்து மேடைக்கு தீ வைத்தனர். இதனால் மேடை கொளுந்து விட்டு எரிந்தது.
பதறிபோனார்கள் ஆதரவாளர்கள். “அய்யோ இனிமேல் போய் பேசினால் நம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விடுவார்கள். எனவே ஓடியே போய் விடுவோம்” என அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓட ஆரம்பித்து விட்டனர்.
எப்படியோ கூட்டத்தில் இருந்து மாணவர்களை விரட்டி விட்டோம் என்றாலும் மேடையை எரித்த காரணத்தினால் அவர்கள் மீது போலிஸ் வழக்கு பதிவு செய்தது.
மேகநாதன் அங்கிருந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு தலை மறைவாய் சென்றான்.
அங்கிருந்த டாக்டர் இவனை பார்த்தார்.
“என்ன காயம்?”.
“கீழே விழுந்து விட்டேன்”.
“இல்லை யாரோ அடித்தது போல அல்லவா தெரிகிறது”.
“ஆமாம் போலீஸ் அடித்து விட்டது”.
டாக்டர் பயந்தார்.
“அய்யோ அப்படியென்றால் இது போலீஸ் கேஸ். நான் எப்படி மருத்துவம் பார்க்க. உனக்கு எப்படி அடிப்பட்டது”.
டாக்டரை பார்த்து சிரித்தான் மேகநாதன்.
“நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும் என போராடினால் அடிக்கத்தான் செய்வார்கள். ஒவ்வொரு அடியும் எங்கள் சுதந்திரத்துக்கு நாங்கள் கொடுக்கும் காணிக்கை. பரங்கியருக்கு நாங்கள் அடிக்கும் சாவு மணி”.
சிறுவன் பேச்சை ஆச்சரியத்துடன் பார்த்தார் டாக்டர்.
உடன் இருந்த மாணவர்கள் சொன்னார்கள். “பரங்கியர்களுக்கு ஆதரவாக பேசியவர்கள் தாக்கச்சென்றோம். எங்களை போலீஸ் தாக்கி விட்டது” என்றனர்.
டாக்டர் யோசித்தார். “இந்த சிறுவர்கள் மனதில் சுதந்திர வேட்கை எப்படி இருக்கிறது. இவர்களை நாம் சாதாரணமாக நினைக்க முடியுமா?”
“தம்பி. உன்னை போன்று எங்களுக்கும் போராட ஆசைத்தான். ஆனால் நாங்கள் மருத்துவர்கள். எங்களால் இயலவில்லை. ஆனால் நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். உங்களுக்கு எங்களால் முடிந்த உதவி. உனக்கு நான் மருத்துவம் செய்கிறேன்” என்றார்.
மாணவர்கள் அனைவருக்கும் சந்தோசம். டாக்டர் யாருக்கும் தெரியாமல் தனது வீட்டில் உள்ள அறை ஒன்றில் வைத்து மேகநாதனுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.
உடன் வந்த மாணவர்களிடம் சொன்னார். “யாரும் இங்கே வரக்கூடாது. மூன்று நாள் கழித்து அதிகாலையில் வந்து இவனை கூட்டிச் செல்லுங்கள். அது வரை யார் நடமாட்டமும் இங்கே இருக்க கூடாது” என்றார்.
மேகநாதன் முகத்தினை பார்த்தார்கள்.
மேகநாதன் கண் அசைக்கவே. அங்கிருந்து மாணவர்கள் அப்படியே தேரிக்காட்டுக்குள் புகுந்து காணாமல் போய் விட்டனர்.
இவர்கள் தேரிக்காட்டுக்குள் நுழைந்து காணாமல் போவதும், அவர்களை போலீசார் பிடிக்க முடியாமல் திண்டாடுவதும் வாடிக்கை தானே. ஆனால் மேகநாதன் எங்கே இருக்கிறான் என்பது மட்டும் போலிசுக்கு புரியவில்லை. அதே வேளையில் மேகநாதனுக்கு அடி அதிகமாக பட்டிருக்கிறது. எனவே திருச்செந்தூரை தாண்டி அவன் எங்கேயும் போய் இருக்க முடியாது என திருச்செந்தூரை சுற்றி வலை விரித்து வைத்தனர் போலிசார்.
தேரிக்காட்டுக்குள் சென்ற மேகநாதனின் நண்பர்களுக்கு சந்தேகமும் இருந்தது. “மேகநாதனை தனியாக விட்டு விட்டு வந்திருக்கிறோம். அவனுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் என்ன செய்ய?”
ஒருவன் சொன்னான். “ஒரு வேளை டாக்டர் வேண்டு மென்றே நம்மை பிரித்து மேகநாதனை போலிசில் பிடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருப்பாரோ?”-
“சேய் அப்படியெல்லாம் இருக்காது”.
“அப்படியே பிரச்சனை என்றாலும் மேகநாதன் சாமாளிப்பான். அவரிடம் இருந்து தப்பித்துவிடுவான். போலிசிடம் மட்டும் மாட்டவே மாட்டான்”.
ஒருவன் தைரியம் சொன்னான்.
“இருக்கட்டும். நாமும் முதலில் போலிசில் மாட்டி விடக்கூடாது” என்றான்.
ஆகவே அவர்கள் அனைவரும் தேரிக்காட்டுக்குள் மறைந்து வாழ்ந்தனர். சாப்பாட்டு வேளையில் மட்டும் சித்தன் விளைக்கு வந்து, அங்கு சுதந்திர போராட்ட வீரர்களுக்கென உணவளிக்கும் இடத்தில் சாப்பிட்டு விட்டு, மீண்டும் காணாமல் போனார்கள்.
மூன்று நாள் கழித்தது.
அதிகாலையிலேயே மருத்துவர் வீட்டுக்கு மேகநாதனின் நண்பர்கள் வந்தனர்.
அங்கே சகல பாதுகாப்புடன் மேகநாதன் இருந்தான்.
காலில் பெரிய கட்டு போட்டிருந்தது. அவனால் நடக்க முடியவில்லை. ஆனாலும் நம்பிக்கையோடு இருந்தான்.
நண்பர்கள் சுத்தி நின்றனர்.
டாக்டர் சொன்னார். “எலும்பில் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் அடி அதிகமாக பட்டிருக்கிறது. ஆகவே 1 மாதமாகவது பெட் ரெஸ்ட் இருக்க வேண்டும்”.
“எப்படி பெட் ரெஸ்ட் இருக்க. பாதுகாப்பு எப்படியும் இருக்கும். எப்படியும் போலிஸ் நாயுடு இவனை பிடிக்காமல் விட மாட்டேன் என மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கிறார்.
டாக்டர் இவர்கள் முழிப்பதை பார்த்தவுடன் சொன்னான். “தம்பி சின்ன வயதிலேயே நீங்கள் சுதந்திர போராட்டம் போராடுகிறீர்கள். நல்ல விசயம். நானும் இந்த நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என்னால் முடிந்தது உங்களை காப்பாற்றி மருந்து போட்டது தான். இதற்கு மேல் என்னால் உதவ முடியாது. தயவு செய்து இவனை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள்”.
மேகநாதன் சொன்னன். “எப்படியும் என்னை உடன்குடி கூட்டிச் செல்லுங்கள். மற்றப்படி நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான்.
மாணவர்கள் யோசித்தனர்.
“சரி மேகநாதா. மூன்று நாள் உதவிய டாக்டருக்கு நன்றி. இனி இங்கிருந்து கிளம்புவோம்”.
ஒருவன் தோள் கொடுக்க, அவன் முதுகில் மேகநாதன் கழுத்தை சுற்றி பிடித்தப்படி ஏறினான். அவனை சுமந்தபடியே நடக்க ஆரம்பினர்.
ஒருவரை ஒருவர் மாற்றி மேகநாதனை தோளில் சுமந்தபடி காட்டு வழியாகவே உடன் குடி வந்தனர். பெரும்பாலுமே இந்த வழியாக பனையேறும் தொழிலாளிகளை தவிர வேறு யாரும் நடந்து செல்ல முடியாது. அது போக வாகனங்கள் இங்குள்ள தேரி மணலில் கடந்து செல்ல முடியாது. எனவே இந்த வழியாக மாணவர்கள் நடக்க ஆரம்பித்தனர்.
உடன்குடியில் மேகநாதனின் வீட்டுக்கு சென்றனர்.
இவரை பார்த்த தாயார் அலறினார்.
“என்னடா இப்படி பண்ணுறே நமக்கு இருக்கிற வசதிக்கு , நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தா இப்படி அடிபடணுமா? நமக்கு பிரச்சனை தேவையா? பேசமா எல்லாத்தையும் விட்டுட்டு ஒழுங்கா இருடா?”
மேகநாதன் சிரித்தான். “அம்மா நம்ம தாய் மண் சிறகொடிந்து கிடக்கு. அடிமை விலங்கை அறுத்தெறிய வேண்டமா? எல்லாரும் இப்படியே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி நமது தாய் நாட்டை காப்பாற்றுவது”.
இவன் பேச்சு எல்லாம் தாயின் காதில் ஏறவில்லை.
“அடேய். நீ சொல்றது எனக்கு புரியலைடா? ஆனா உன்னைத் தேடி போலீஸ் வந்து கிட்டே இருக்குடா. நீ எப்போ வந்தாலும் உன்னை போலீஸ் ஸ்டேஷனுல கொண்டு வந்து ஒப்படைக்கணுமுன்னு சொல்லியிருக்காங்க. நீ. இங்க வந்தது தெரிஞ்சா கூட உன்னை விட்டு வைக்கமாட்டாங்கடா”.
தாயார் அழுது கொண்டே சொன்னார்.
மேகநாதன் முடிவு செய்தான். “அப்படியென்றால் குலசேகரபட்டினத்தில் நமக்கு தெரிந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் இருக்கிறார். அவர் மூலமாக போய் சரண்டர் ஆகி விடலாமா?” என நினைத்தான்.
நண்பர்களிடம் சொன்னான்.
அவன் சொல்லை அவர்களும் அமோதித்தார்கள். “அவன் சொல்லுவதும் சரித்தான். போலிசிடம் சரண்டர் ஆனால் போலீஸ் அடியில் இருந்து தப்பித்து விடலாம்” என்றனர்.
சரி முதலில் தாயாரிடம் இருந்து விடைப்பெற்று கிளம்புவோம் என்று முடிவு செய்தான் மேகநாதன்.
தாயிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பினான்.
இடையில் வந்துக்கொண்டிருக்கும் போதே சொன்னான் மேகநாதன். “டேய் போலீஸ் கிட்ட மட்டும் மாட்டக்கூடாது. அப்படி மாட்டினா. நம்மளை கொன்னுபுடுவானுவ. ஏதோ என் அம்மாவிடம் ஆறுதலுக்கு அப்படி சொல்லிவிட்டேன். ஆனால் போலிசில் மாட்டவே கூடாது”.
அனைவரும் அமைதியாக இருந்தார்கள். “ஆனால் நம்ம சப் இன்ஸ்பெக்டர் இராலிங்கம்பிள்ளை காங்கிரஸ் காரர். நேரே அவர் வீட்டுக்கு போவோம். அவரிடம் என்ன செய்யலாம் என ஐடியா கேட்போம்” என்றான்.
அனைவருக்கும் பயமாக இருந்தது. கிராமத்தில் ஒருபழமொழி சொல்வார்களே “போலிசுக்கு பயந்து தலையாரி வீட்டில் ஒழிந்த மாதிரி” என்பார்களே.
அதுபோல சொல்கீறானே. போலீஸ்தான் இவனை தேடுகிறது. அப்படி இருக்கும் போது சப் -இன்ஸ்பெக்டர் இவனை காப்பாற்றுவாரா?
நிச்சயம் போலீசில் மாட்டிக் கொள்ளபோகிறான் மேகநாதன். நண்பர்கள் அனைவர் மனதிலும் கிலி பிடித்தது.
(கொலை வழக்கு தொடரும்)


