தொகுளுவ மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் மார்ச் 24, 1922 – மே 25, 2013) என்பவர் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2003இல் பத்மசிறீ விருதைப் பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார்.
சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் தொ. அ. மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். தொகுளுவ என்ற குடும்பப் பெயரும் தந்தையின் பெயரும் சேர்த்து டி. எம். சௌந்தரராஜன் என்று அழைக்கபட்டார். சிறுவயதிலிருந்தே இசைமீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். பள்ளி இறுதிவரை படித்த சௌந்தரராஜன், பின்னர் இசையை பயிலத் துவங்கினார். 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக கர்நாடக இசை பயின்றார். பல ஆண்டுகள் மேடைகளில் கச்சேரி செய்து வந்தார். அந்நாலில் உச்ச நட்சதிரமாக இருந்த தியாகராஜ பாகவதரின் பாடல்களை மேடைகளில் பாடி தன் திறமையை மெருகேற்றிவந்தார். இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடவைத்து பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார். என்றாலும் இவருக்கு பட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கவில்லை.


