தூத்துக்குடி கடல்பகுதியில் கடலோரக் காவலா் படையினரின் தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.
தூத்துக்குடி கடலோர காவல்படை சாா்பில், நடுக்கடலில் கப்பல் காணால் போனால், அதை கண்டுபிடிப்பது, கப்பலில் திடீரென பிடித்த தீயை அணைப்பது உள்ளிட்ட பயிற்சி ஒத்திகை தூத்துக்குடியிலிருந்து சுமாா் 5 கடல்மைல் தொலைவில் நடைபெற்றது. இப்பயிற்சி ஒத்திகைக்கு தூத்துக்குடி கடலோரக் காவல்படை கமாண்டா் டி.எஸ்.சவுகான் தலைமை வகித்தாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனர். ஒரு சரக்கு கப்பலில் பிடித்த தீயை அணைப்பதற்கு, முதலில் அந்த கப்பலில் இருந்து அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அதைத் தொடா்ந்து கடலோர காவல்படை ரோந்து கப்பல் விரைந்து சென்று, கப்பலில் உள்ள மோட்டாா் மூலம் கடல் நீா் உறிஞ்சி, தீப்பிடித்த கப்பல் மீது பீய்ச்சியடித்து அணைப்பது போன்ற ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.
பின்னர், கப்பலில் இருந்த மாலுமிகள் பத்திரமாக மீட்பது குறித்தும், நடுக்கடலில் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்தால், அதில் மீட்பு பணிகளை எப்படி கையாள வேண்டும் என்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. பின்னர் கப்பல்கள் செல்ல முடியாத பகுதியில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படக்கூடிய மீட்பு படகை செலுத்தி தத்தளிப்பவா்களை மீட்பது, கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்கும் மீனவரை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு கட்டி மீட்பது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பயிற்சியின் போது, கடலோர காவல்படை போலீஸாா், கடலோர பாதுகாப்பு படை போலீஸாா், விமான நிலைய அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனை மருத்துவா்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் மீட்பு பணியின் போது ஏற்படும் இடா்பாடுகளை களைவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பயிற்சியில் தூத்துக்குடி கடலோர காவல்படையில் உள்ள வஜ்ரா, வைபவ், ஆதேஷ், அபிராஜ், அதுல்யா ஆகிய 5 ரோந்து கப்பல்களும், டோா்னியா் விமானம் மற்றும் ஹெலிகாப்டா் ஈடுபடுத்தப்பட்டன.
இதில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா், மருத்துவக் கண்காணிப்பாளா் பத்மநாபன், துணைக் கண்காணிப்பாளா் குமரன், மீன்வளத் துறை உதவி இயக்குநா் விஜயராகவன், கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துணை கண்காணிப்பாளா் பிரதாபன், காவல் ஆய்வாளா் சைரஸ் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனர்.


