ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சண்டையை உலக நாடுகள் அனைத்தும் பதற்றத்தோடு எதிர்நோக்குகின்றன. அமெரிக்காவின் நகர்வு என்னவாக இருக்கும், ஐரோப்பிய யூனியன்களின் நிலைபாடு எப்படி அமையும், இந்தியா, சீனா போன்ற நாடுகளின் நிலைபாடுகள் என்ன என்பதும் இப்போது மிக முக்கியமான கேள்விகளாக உள்ளன. இந்த போர் பெரும் போராக வெடிக்கும் பட்சத்தில் உலக நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரும் ஆட்டத்தை சந்திக்கும். தினசரி நம் வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் விலை கடுமையாக உயரும். குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை, இயற்கை எரிவாயு விலை, சமையல் எரிவாயு விலை, சமையல் எண்ணெய் விலை, காய்கறி விலை, மருந்து மாத்திரைகள் விலை என எல்லாமே ஏறும் அபாயம் உள்ளது. இவையெல்லாம் எல்லா நாடுகளின் குடிமக்களின் மீதுதான் பெரும் சுமையை ஏற்றும். போரில் நேரடியாக பாதிக்கப்படுவது உக்ரைன் மக்களாக இருந்தாலும், மறைமுகமாக பாதிக்கப்படுவது உலகநாடுகளின் மக்கள் அனைவரும்தான். எங்கோ போர் நடக்கிறது நமக்கென்ன என்று இருப்பதற்குதான் நம்மை ஆள்பவர்கள் நமக்கு கற்றுத்தந்து கொண்டிருக்கிறார்கள். உலகில் என்ன நடக்கிறது என்று பேசுவதற்கோ, சிந்திப்பதற்கோ மக்களை பழக்கவில்லை. ஒரு நாட்டின் மக்கள் அந்த நாட்டை வேறொரு நாட்டின் பிரச்சனைகளில் தலையிட்டு பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்க ஒரு நிர்பந்தத்தை கொடுக்க வைக்க ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வைக்க மக்களை அரசியல் இயங்கங்கள் பழக்கவில்லை. முன்பு இடதுசாரிகள் உலக அரசியலை குக்கிராமங்களிலும் பேசினர். அதனை “மாஸ்கோவில் மழை பெய்தால் கம்யூனிஸ்டுகள் மதுரையில் குடை பிடிப்பார்கள்” என்று நக்கலடித்தனர். உள்ளூர் பிரச்சனையை பேசாமல் உலகப்பிரச்சனையை பேசுகிறார்கள் என்று விமர்சனமும் இடதுசாரிகளை நோக்கி வைக்கப்பட்டன. இன்று அதுபோன்ற விமர்சனங்களுக்கெல்லாம் வழி ஏற்படுத்தாமல், பெரும்பான்மையான இடதுசாரிகளே உலக அரசியலை பேசுவதை கைவிட்டுட்டனர். மக்களை அரசியலில் முன்னோக்கி நகர்த்தி செல்லவேண்டியவர்களே இன்று பின்னோக்கி நின்று மக்களிடம் உலக விசயங்கள் போன்று சில விசயங்களை வரையறுத்துக்கொண்டு இவைகளையெல்லாம் மக்களிடம் பேசினால் மக்களுக்கு புரியாது என்று தீர்மானித்து அதிமேதாவிகளாகி விடுகின்றனர். இடதுசாரிகள் மட்டுமே சர்வதேசியவாதிகள். அவர்களுக்கு மட்டுமே தேசங்களற்ற கம்யூனிச சமூகத்தை நிர்மாணிக்கும் மிகப்பெரும் கடமை உள்ளது. உலக நாடுகளின் பிரச்சனைகளுக்கு உள்ளூர் பிரச்சனைகளோடு இருக்கும் தொடர்புகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி மக்களை அரசியல்படுத்துவது முதன்மை தேவையாக உள்ளது. மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பதுதான் மிக மிக முக்கியமானது.


