திருச்செந்தூர் பாலக்காடு ரயில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனாவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சமயங்களில் செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று சென்றது. தற்போது இந்த ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது. ஆனால் தற்போது செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படவில்லை.
இதுகுறித்து பல்வேறு கடிதங்களை பல்வேறு அமைப்புகள் மூலமாக ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வருகின்றனர் இப்பகுதி பொதுமக்கள். தூத்துக்குடி எம்.பி கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் அவர்களும் அதிகாரிகளுக்கு முறைப்படி மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
திட்டமிட்டே தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள இந்த மூன்று ரயில் நிலையங்களையும் ரயில்வே நிர்வாகம் புறக்கணிக்கிறது. ஆனால் இங்கு பாஸஞ்சர் ரயிலாக இயங்கி வந்த திருச்செந்தூர் திருநெல்வேலி ரயிலும் விரைவு ரயிலாக இயக்கப்பட்டும் செய்துங்கநல்லூர் தாதன்குளம் ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்கிறது. திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.
ஆனால் பாலக்காடு திருச்செந்தூர் ரயில் மட்டும் திட்டமிட்டே நிறுத்தப்படவில்லை. மிகப்பெரிய ரயில் நிலையங்களாக ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ரயில் நிலையங்கள் இருந்தும் கூட திட்டமிட்டே இந்த ரயில்நிலையங்களை புறக்கணித்து வருகின்றனர் ரயில்வே நிர்வாகத்தினர். இதே நேரத்தில் பாலக்காடு திருச்செந்தூர் ரயில் போக்குவரத்தினை பொறுத்தவரை தமிழ்நாடு மட்டுமே புறக்கணிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 16 ந்தேதி இயக்கப்பட்ட இந்த ரயில் கடந்த 24.12.2021 முதல் கேரள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வட்டார பொதுமக்கள் தொடர் முயற்சியால் ஆனைமலை ரோடு ஸ்டேஷனில் ரயில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
ரயில்வேயில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆகவே அவர்கள் பகுதியில் மட்டும் இதே ரயிலை நின்று செல்ல நடவடிக்கை எடுத்து உள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தொடர் கோரிக்கை வைத்தும் அவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து நிர்வாகம், முகைதீன் ஆண்டவர் ஜாமியா பள்ளி வாசல் நிர்வாகிகள், தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் நிர்வாகிகள், செய்துங்கநல்லூர் தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் பொதுமக்களை திரட்டி பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
அதன் முதல் போராட்டமாக செய்துங்கநல்லூர் போஸ்ட் ஆபீஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை வகித்தார். தொழில் வர்த்தக சங்க தலைவர் அய்யாக்குட்டி முன்னிலை வகித்தார். விவசாய சங்க தலைவர் குமார், செய்துங்கநல்லூர் ஆர்.சி. பங்கு தந்தை ஜாட்சன் அருள், ஜமாத் தலைவர் அலியார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு , சமூக சேவகர் சுடலை, புங்கன் ஆகியோர் பேசினர். பஞ்சாயத்து உறுப்பினர் ராஜ், பட்டு, பொன்னையா, முருகன், ராஜ் குமார், வி.கோவில்பத்து பஞ்சாயத்து தலைவர் கொம்பையா, தாதன்குளம் சுடலை , மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். வியாபாரிகள் சங்க பொருளாளர் பால்சாமி செய்துங்கநல்லூர் வியாபாரிகள் சங்கத்தினர், பஞ்சாயத்து நிர்வாகத்தினர், மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்ல் பங்கேற்றனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.எ ஊர்வசி அமிர்த்த ராஜ், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் ஆகியோர் பேராட்ட மக்களை சமாதான படுத்தினர் . பஞ்சாயத்து உறுப்பினர் அபி நன்றி கூறினார்.
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின் தான் சம்பந்தப்படட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன். இல்லையென்றால் நானும் உங்களது தொடர் போராட்டத்தில் கலந்துகொள்கிறேன் என்று பேசினார். அவர் கூறும்போது, தொடர்ந்து இந்த பிரச்சனை குறித்து நானும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். மேலும் நான் மதுரை இரயில்வே உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசி, இரயிலை ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், தாதன்குளத்தில் நின்று செல்ல ஆவண செய்கிறேன் என்று கூறினார். மேலும் கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரனும் பொதுமக்களை சமதானபடுத்தி பேசினார். அவர் கருங்குளம் யூனியன் கூட்டத்தில் ரயிலை நிறுத்த கூறி தீர்மானம் நிறைவேற்றவும், கருங்குளம் ஒன்றிய அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் அந்தந்த பஞ்சாயத்தில் ரயிலை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றி தரகேட்டுள்ளோம். அதையும் சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்புவோம் என்று கூறினார்.
மேலும் பாலக்காடு திருச்செந்தூர் ரயிலை செய்துங்கநல்லூர் , தாதன்குளம், ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்காவிடில் இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 1ம் தேதி தபால் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டமும், மூன்றாம் கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி செய்துங்கநல்லூரில் அனைத்து கடைகளும் அடைத்து கடையடைப்பு போராட்டமும், நான்காம் கட்டமாக பிப்ரவரி 15ம் தேதி செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டமும், ஐந்தாம் கட்டமாக பிப்ரவரி 22ம் தேதி செய்துங்கநல்லூரில் பொதுமக்களை திரட்டி ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம், மற்றும் தொழில் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேஷ் ஏற்பாட்டின் படி செய்துங்கநல்லூர் இன்ஸ்பெகடர் அருள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது