தச்சமொழி ஸ்ரீ செல்வவிநாயகர் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியலைத் திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தச்சமொழி- முதலூர் செல்லும் சாலையில் அருள்மிகு செல்வவிநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் குடத்தில் செய்யப்பட்ட உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோயில் நிர்வாகி ஆறுமுகம் (70) நேற்று கோயிலுக்கு வந்தபோது மர்ம நபர்கள் கோயிலில் பூட்டை உடைத்து அங்கிருந்த உண்டியலைத் தூக்கிச் சென்றுள்ளது தெரியவந்தது. உண்டியலில் ரூ 7ஆயிரம் இருந்ததாகத் தெரிகிறது..
இதையடுத்து அவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் காவல்துறை விசாரித்து வருகின்றனர். இதேபோல் கடந்த 5மாதத்திற்கு முன்பு அதன் அருகில் உள்ள ஸ்ரீவீரசூரபெருமாள் கோயிலில் பூட்டை உடைத்து அங்கிருந்த உண்டியலை மர்ம நபர்கள் தூக்கிச் சென்றுள்ளது குறித்தும் ஏற்கனவே புகார் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் திருட்டில் ஈடுப்பட்ட நபர் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கொண்டு விசாரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


