மணக்கரை மேலூரில் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணக்கரை மேலூர் கிராமத்தில் மருதூர் கீழக்காலில் இருந்து பிரியும் வாய்க்கால் பாலம் சேதமடைந்து காணப்பட்டது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த பாலத்தை அகற்றி புதியபாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராடி வந்தனர். மேலும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பழைய உடைந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைத்து தரகோரி மனுக்களை அளித்தனர்.
இந்தநிலையில் மழைகாரணமாக கடந்த சில மாதத்திற்கு முன்பு பாலம் உடைந்து சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வயல்வெளிக்கு வேலைக்கு செல்ல முடியாமலும் மயானபாதைக்கு செல்லமுடியாமலும் தவித்து வந்தனர்.
இதனையறிந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மணக்கரையில் உடைந்த பாலத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனையடுத்து புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதற்கிடையில் இரும்பிலான கம்பிகள் மூலம் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அரசு நீர்வளத்துறை சார்பில் 43 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மணக்கரை மேலூர் கிராமத்தில் மருதூர் கீழக்காலில் இருந்து பிரியும் வாய்க்காலில் புதிய பாலம் கட்டும் பணியை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலம் கட்டும் பணி குறித்த விபரங்களை நீர்வளத்துறை செயற்பொறியாளரிடம் அவர் கேட்டறிந்தார்.
இந்தப் பணி மூன்று மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, மணக்கரை பஞ்சாயத்து தலைவர் அருணாசல வடிவு சீனி பாண்டியன், உதவி பொறியாளர்கள் வினு பாஸ்டின், நவீன் பிரபு, மாவட்ட விவசாய சங்க துணை அமைப்பாளர் நேரு, ஒன்றிய கவுன்சிலர் சின்னத்துரை, கம்யூனிஸ்ட் கட்சியின் கருங்குளம் ஒன்றிய செயலாளர் மணி, விவசாய சங்க மாநில பொறுப்பாளர் சீனிவாசன், ஆழ்வார் விவசாய சங்க துணைத் தலைவர் நயினார், உட்பட கலர் கலந்து கொண்டனர்.


