
பழையகாயல் ஊராட்சியில் கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி திருவைகுண்டம் தொகுதி செயலாளர் ஜேசுராஜ் மற்றும் அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் பழையகாயல் ஊராட்சிக்குட்பட்ட கணேச நகர், அம்புரோஜ் நகர், பரிபூரண நகர் மற்றும் தாமஸ் நகர் ஆகிய கடற்கரைக் கிராமங்களில் கடந்த 2023ம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பழையகாயல் மெயின் ரோட்டிலிருந்து 2 கி.மீ தூரம் உள்ள இந்த கடற்கரை கிராமங்களுக்கு செல்லும் சாலையானது வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு மண்அரிப்பு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இப்பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் பயணம் செய்யும் வாகனங்கள் ஆபத்தான முறையில் கடக்கும் நிலை உள்ளது. மேலும் மீன்பிடித் தொழிலுக்கும் உப்பள வேலைக்கும் செல்லும் தொழிலாளர்கள் அவ்வப்போது விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் அவசர தேவைக்கு மருத்துவத்திற்குக் கூட கீழே அவசர ஊர்தி வரமுடியாத சூழல் உள்ளது. கணேச நகருக்குள் செல்லும் குடிநீர்க் குழாய் சாலையோரம் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் சேதமடைந்து குடிநீருக்குக் கூட வழியில்லாமல் தவிக்கும் நிலை உள்ளது.
இது சம்பந்தமாக பல தடவை மனு அளித்தும் வேலை நடக்கவில்லை. வேலைக்காக வந்தப் பொருட்களும் திருப்பி எடுக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது. எனவே இந்த பிரச்சினையைத் தாங்கள் கவனத்தில் கொண்டு விரைந்து செய்து முடிக்கப் பணிவன்போடு நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். தவறும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் தழுவிய போராட்டம் பழையகாயலில் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.