ஸ்ரீவைகுண்டம் அருகே பைக்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வடக்கு தோழப்பன்பண்ணை சேர்ந்த முருகன் மகன் பாலா (எ) பாதாளம் (18). இவர் தனது நண்பர்களான ஸ்ரீவைகுண்டம் வாய்க்கால் கரை தெருவைச் சேர்ந்த இசக்கி பாண்டி மகன் இசக்கிமுத்து (24). ஸ்ரீவைகுண்டம் குருசு கோவில் தெருவைச் சேர்ந்த காளி மகன் துரை(18) ஆகியோருடன் நேற்று ஏரலில் இருந்து ஸ்ரீவைகுண்டத்தை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஆழ்வார்தோப்பு அருகே உள்ள இசக்கியம்மன் சாத்தான் கோவில் அருகே ஏரலை நோக்கி வாழைத்தார் ஏற்றி சென்ற லோடு வேன் மீது நேருக்கு நேர் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பாலா தாமரபரணி வடகால் வாய்க்காலில் விழுந்தார். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஶ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார் ராஜாராபர்ட், சந்தன குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த துரை மற்றும் இசக்கிமுத்து ஆகிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் ஶ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக காயமடைந்த இருவரையும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் வடகால் வாய்க்கால் தண்ணீரில் விழுந்த பாலாவை மீட்க தீயணைப்பு துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பாலாவை இறந்த நிலையில் மீட்டனர்.
இதையடுத்து பாலாவின் உடலை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.