தாமிரபரணி ஆற்றங்கரை பயணத்தில் மதியம் 12 மணிக்கும் இருளை தன்வசப்படுத்தி இருக்கும் பொதிகை மலை காடுகளை நோக்கி பயணித்த முதல் பாகமே ஆர்வத்தை அதிகரித்தது.
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் 2010 ஆம் ஆண்டு மே முதல் நாள் பொதிகை மலையில் அகத்தியரை தரிசிக்கவும், தலைத் தாமிரபரணியை காணவும் சென்ற பயண அனுபவங்கள் சிலிர்ப்பூட்டுகிறது .
கேரள வனப்பகுதியில் காணிதலம் செக்போஸ்ட்டை கடந்து போனக்காடு எஸ்டேட் வழியாக பேப்பாறை வனப்பகுதி வழியாக நாங்களும் பயணித்த அனுபவத்தை கொடுக்கிறது.
அட்டைக்கடிகள், கரடிகளின் அச்சுறுத்தல், யானை, புலிகளின் நடமாட்டங்களுடன் ராஜ நாகங்களின் அபாயத்தையும் தாண்டி கருமேனியாறு, வாலை பிந்தியாறுகளை கடந்து செல்லும் போது கட்டுரை வழியே அந்த கல் பங்களாவில் நாங்களும் தங்கி கொள்கிறோம்.
இக்கட்டுரையில் யானைக் கூட்டங்களில் இருந்து தப்பிக்க பாதையின் ஓரங்களில் வெட்டி வைத்திருக்கும் குழிகளும், தப்பிச் செல்ல அதன் குறுக்கே போடப்பட்டிருக்கும் மரக்கம்புகள் பற்றிய தகவல்களும், புகைப்படங்களும் சிறப்பு.
தொடர்ந்து பயங்கரமும், புனிதமும் நிறைந்த பொதிகை மலைகளுக்கிடையே எம் தாமிரபரணியின் உற்பத்தையும், அகத்தியர் தரிசனத்தையும் காண காத்திருக்கிறோம்.