திருநெல்வேலி மாவட்டம் பாளையம் கோட்டை அருகே உள்ளது சீவலபேரி கிராமம். இந்த கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை துறையின் கீழ், கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையில் அப்பகுதியை சேர்ந்த மருகால் தலை, மடத்துப்பட்டி, குப்பக்குறிச்சி, பதினாலாம்பேரி, அலங்காரபேரி, கான்சாபுரம், மருதூர்,நொச்சிகுளம், தோனிதுறை, திருத்து, கீழப்பாட்டம் போன்ற பல கிராம மக்கள் கால்நடை மருத்துவமனைக்கே தங்களின் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை சிகிச்சைக்காக தினமும் கொண்டு வருகிறார்கள்.இங்கு செயல்பட்டு வரும் மருத்துவமனையானது மிகவும் சேதம் அடைந்து முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இங்கு பணிபுரியும் மருத்துவர், உதவியாளர்கள் மிகுந்த அச்சத்துடனேயே பணிபுரிய வேண்டிய ஆபத்தான நிலை உள்ளது. இம் மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்து வரும் பொதுமக்களும் மிகுந்த பயத்துடனேயே வந்து செல்கிறார்கள்.இது குறித்து வசவப்பபுரம் மு. கணேசன் கூறும் போது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அதிகமான கிராம மக்கள் பயன்படுத்தும் சீவலப்பேரி கால்நடை மருத்துவ மனைக்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் . விவசாய குடி மக்களின் பிரச்சனையை தீர்த்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கான மனுவை தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் அனுப்பியுள்ளார்.தமிழக அரசு மேற்படி மருத்துவமனையை உடனடியாக இடித்து விட்டு, புதிய மருத்துவமனை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


