
நான் (முத்தாலங்குறிச்சி காமராசு) எழுதிய “வரங்களை அள்ளித் தரும்
வல்லநாடு சித்தர்” தினமலர் பத்திரிக்கையின் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்த புத்தகம் டோல்ப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம். டோல்ப்ரீ எண் 18004257700 விலை 260 ரூபாய்.
இன்று தினமலரில் வந்த நூல் விமர்சனம் வருமாறு
மனிதன் என்பவன் தெய்வமாகலாம். மனிதனுக்குள் சொல்லொணாத ஆற்றல்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முறையாக பயன்படுத்தி தெய்வ நிலைக்கு உயர்பவர்களை சித்தர்கள் என நாம் அழைக்கிறோம். சித்து என்றால் உயிர். சித்தர் என்றால் உயிர் உடைய ரகசியம் அறிந்தவர் என்று பொருள் படுவர். ஆற்றல் பெற்றாரைச் சித்தி அடைந்தவர் என அழைப்பதுண்டு மனத்துக்கண் மாசிலனாகி செயற்கரிய செயல் புரிபவர் சித்தர்கள். சித்தி எனும் சொல்லிற்குக் கைகூடல், முயற்சியில் வெற்றி என்பது பொருளாகும். ஐம்புலனை அடக்கும் சித்திகளில் சிறந்தவைகள் எட்டு. அதை அட்டமா சித்தி என்று கூறுகிறார்கள். இந்த சித்தியில் பெயர் பெற்றவர் வல்லநாட்டு சுவாமிகள். அவர் தன் உடலை தனித்தனியே பிரித்து காட்டி அற்புதம் செய்துள்ளார். ஒரு சிறிய கிராமான வல்லநாட்டருகே பாறைக்கட்டில் பிறந்த மனிதர், மகானாக மாறித்தம் அருட்செயலால் மக்களிடையே வளர்ந்த ஆன்மிகச் சிந்தனையை வெளிப்படுத்துவதும், சித்தர் எனப் பறை சாற்றாது சித்தி பெற்றதை வெளிப்படுத்தியதையும் இந்த நூலில் இதன் ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு விவரிக்கிறார்.
– இளங்கோவன்.