தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துவிட்டவைகளில் ஒன்று பனை. இதை வெறும் மரமாக மட்டும் பார்க்காமல் தங்கள் வாழ்வின் அடை யாளமாகவே மாற்றிக்கொண்டனர் தமிழர்கள். அதனால்தான் தமிழகத்தின் மரமாக பனை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வளமிக்க தமிழ் பூமியில் எண்ணற்ற மரங்கள் விளைந்து செழித்திருக்க, அப்படி என்ன உசத்தி இந்த பனைமரத்துக்கு என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும். பசேலென்று தழைத்திருக்கும் வாழையின் அத்தனை பாகங்களையும் பயன்படுத்தத் தெரிந்த தமிழ் இனம், வாழையைவிடவும் கூடுதலாகப் பயன் படுத்திய தாவரம் பனைதான். சங்க கால நூல்களான தொல்காப்பியம், சிலப் பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழர்களின் உணவிலும், உணர்விலும்கூட பனை மரம் இணைந்தே உள்ளது. கற்பகத்தரு என்று போற்றப்படும் பனை தனது கடைசி காலம் வரை பயன் தரும் தந்தையைப் போன்றது. அதனால்தான் ‘பிள்ளைகள் காப்பாற்றாவிட்டாலும் பனை காப்பாற்றும்’ என்கிற பழமொழி வழக்கத்தில் உள்ளது. சைவ சமயத்தில் பனை மரத்தை இன்று வரை தெய்வமாக வழிபடும் கிராமக் கோயில்களும் உண்டு. கம்போடியா நாட்டு மக்கள் பனை மரத்தை பொக் கிஷமாகப் பாதுகாத்துவருகிறார்கள்.
எந்த செலவுமின்றி வளர்ந்து நிற்கும் பனை மரத்தின் ஆயுட் காலம் சராசரியாக 60 ஆண்டுகள். பனை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பயன் தருபவை. இதன் அறிவியல் பெயர் ‘போராசஸ் பிளாபெல்லிபர்’. இந்த மரம் 10 ஆண்டுகளில் சுமார் 15 மீட் டர் வரை வளரும் தன்மை உடையது. 10 ஆண்டிற்குப் பிறகே அது பலன் தரும் பனையா, ஆண் பனையா என்று தெரிந்துகொள்ள முடியும். இம்மரத் தின் பயன்பாடு என்பது பண்டைய காலம் தொட்டு வழி வழியாக நம் மோடு தொடர்கிறது.
கோடை காலங்களில் ஏற்படும் உடல் வெப்பத்தைத் தணிக்க, பனை மரத்தில் இருந்து பெறப்படும் பதநீர், நுங்கு பயன்படுத்துகிறோம். பதநீர், நுங்கு உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கிறது. பல்வேறு நோய் எதிர்ப் புச் சக்தியை வழங்குகிறது. பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி ரத்த அழுத்த நோயாளிகளுக்கு இயற்கை அன்னை வழங்கிய வரப் பிரசாதமாக விளங்குகிறது. பதநீரில் இருந்து கிடைக்கும் மற்றொரு உப பொருளான பனங்கற்கண்டு உடலுக்கு ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொடுக்கிறது. சளியைப் போக்கவும், கண்பார்வை திறனை அதிகரிக்கவும், நினைவாற்றலை அதிகரிக்கவும், கிட் னியில் கல் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் பனங்கற்கண்டு பயன்படு கிறது. பனங்கற்கண்டு மூலம் தயாரிக் கப்படும் டீ, காபி, பால் ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வெள்ளைச்சர்க்கரையைப் போல் ரசாயன கலப்புகள் இல்லாத இயற்கை தந்த இனிப்பான பனங் கற்கண்டு தமி ழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.தூத்துக் குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டி, பனங் கற்கண்டு ஆகியவை தனிச்சிறப்பு வாய்ந்தவை. முன்பு இத்தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுவந்தனர். ஆனால், பனை மரம் ஏற போதிய ஆட்கள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் இத்தொழிலில் ஈடுப டுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக குறைந்துவிட்டது. ஆனாலும், இத் தொழிலை விடாமல் ஒரு சிலர் மட் டுமே தலைமுறை, தலைமுறையாகத் தொடர்ந்துவருகின்றனர். சிலர் இத் தொழிலை தங்களது உப தொழிலாக செய்துவருகின்றனர். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பனங் கற்கண்டு தயாரிப்புப் பணி வேகமெடுக்கிறது. அதன்பிறகு இத்தொழிலில் ஈடுபடு வோர் மற்ற வேலைகளுக்குச் சென்று விடுகின்றனர்.
இது குறித்து பனங்கற்கண்டு தொழிலில் ஈடுபடும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டவிளை பகுதியைச்சேர்ந்த செல்வகுமார் கூறியதாவது…
“பனங்கற்கண்டு தயாரிப்பில் நான் மூன்றாவது தலைமுறையாக ஈடுபட் டுள்ளேன். எங்களிடம் மூன்றாயிரம் பனை மரங்கள் உள்ளன. பனை மரத் தின் பாளை முற்றிவிடாமல் இடுக்கி போட்டுப் பக்குவப்படுத்தி, அரிவா ளால் சீவிவிட்டு, அதிலிருந்து வழியும் பதநீர், சுண்ணாம்பு தடவப்பட்ட மண் கலயத்தில் வழியவைக்கப்படும். பனைமரங்கள் அனைத்திலும் பதநீர் கிடைக்காது. சில மரங்களில் அரை டின் கிடைக்கும். சில மரங்களில்தான் முழு டின் வரை வரும்.
பதநீரை வடிகட்டிய பின் தாழிப் பானைகளில் மாற்றிவைப்போம். பின்னர் கால்வாய் அடுப்பில் விறகு கள் கூட்டி, பாகு காய்ச்சப் பிரத்யேக மாக உள்ள வட்டவடிவிலான பெரிய இரும்பு சட்டியில் பதநீரை ஊற்றி 110 டிகிரி வெப்பத்தில் காய்ச்சுவோம். பத நீர் நுரைத்துப் பொங்கி வரும்போது சிறிதளவு ஆமணக்கு விதையைத் தட் டிச் சேர்ப்போம். பதநீர் வற்றி பாகாக மாறும்போது பதம் பார்ப்போம். பெரிய பெரிய மணியாகக் கற்கண்டு வேண்டுமானால் சடை பருவமும், பொடி மணியாகக் கற்கண்டு வேண்டு மானால் சற்று அதிகமாக உஷ்ண பரு வத்திலும் பாகு காய்ச்சுவோம். பால் நல்ல பதம் வரும் வரை தீயை மூட்டி எரிக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து காய்ச்சிய பாகை பெரிய தாழிப் பானைகளில் ஊற்றுவோம். மண்ணைத் தோண்டி அதில் கழுத்துவரை புதைக்கப்பட் டுள்ள மண் பானைகளில் இந்த பாகை சூட்டோடு சூடாக ஊற்றிவிட வேண் டும். இல்லையெனில் பதம் மாறி கற்கண்டின் சுவையும் மாறிவிடும். அந்த பானைக்குள் மருத்துவ குணமுடைய சிறிய அரும்புகள் நிறைந்த கொரண்டி செடியை போட்டு பனை ஓலைப்பெட்டியால் மூடி விடுவோம். பானை மீது வெயில் படாமல் இருக்க பனை ஓலையால் கூரை அமைத்து விடுவோம். 41 நாட்கள் பானையை திறந்து பார்க்கக் கூடாது. 41வது நாளில் கொரண்டி செடி குச்சியை அசைத்துப் பார்க்கும் போது அவை அசையாமல் இருந்தால் கற்கண்டு விளைந்து விட்ட தாக அர்த்தம்.
பானையில் விளைந்துள்ள கற் கண்டைப் பிரித்து எடுத்ததும், கீழ்ப் பகுதியில் சிறிய துளை உள்ள வாளி யில் அள்ளி வைத்து விடுவோம். அப்போது அதிலிருந்து மீதமுள்ள பாகு வடிந்து விடும். பின்னர் நல்ல சூரிய வெளிச்சம் உள்ள பகுதியில் கட்டாந்தரையில் தார்ப் பாய் விரித்து அதன்மேல் கற்கண்டைப் பரப்பி நல்ல வெயிலில் காய வைப்போம். அதன் பின் அதற்கென பிரத்யேகமாக உள்ள சட்ட அலசல்களில் தூவி தரம் பிரித்து மூடைகளில் விற்பனைக்கு அனுப்பி வைப்போம். 10 டின் பதநீரில் 30 கிலோ பனங்கற்கண்டு கிடைக்கும். ஒரு கிலோ ரூ.550க்கு விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி, ஒட்டன்சத்திரம், விருது நகர் பகுதிகளிலிருந்து மொத்த வியா பாரிகள் வந்து வாங்கிச் செல்கின்ற னர், உடன்குடி பனங்கற்கண்டுக்கு என்று தனி மவுசு உள்ளது” என்றார்.
பனங்கற்கண்டு தயாரிப்புப் பணிக் காகக் கைதேர்ந்த ஊழியர்கள் கன் னியாகுமரி மாவட்டத்தில் இருந்து உடன்குடிக்கு வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்படுகின்றனர். அவர்கள் நான்கு மாதங்கள் இப்பணிகளில் ஈடு படுகின்றனர். இதற்காக அவர்களுக்கு தினசரி ரூ.500 ஊதியம் வழங்கப் படுகிறது. அவர்களைத் தவிர்த்து இப் பணிகளில் ஈடுபட தற்போது ஆட் களே இல்லை என்பதே தற்போதைய நிலவரம். இந்தத் தொழிலை பணத்திற் காக நாங்கள் மேற்கொள்ளவில்லை. இத்தொழிலில் உள்ள ஈடுபாட்டால் தான் நாங்கள் தேடி வந்து இந்த வேலையைச் செய்கிறோம் என்று பெருமையோடு சொல் லும் அதே வேளையில் தங்களுக்குப்பின் இதைத் தொடர இளம் தலைமுறை ஆர்வம் காட்டுவதில்லையே என்று வேதனையும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் பர மன்குறிச்சி வட்டவிளை பகுதியில் பனங் கற்கண்டு தயாரிப்பு பணி மேற்கொள்ளும் சேட்டன் தங்கப்பன் (65) என்பவர் கூறிய தாவது: “எனக்கு கன்னியாகுமரி மாவட் டம் மார்த்தாண்டம் தான் சொந்த ஊர். இத்தொழிலில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. எனது தந்தைக்குப் பிறகு நான் இந்தத் தொழிலை மேற்கொள்கிறேன். இதற்காக 4 மாதம் பரமன்குறிச்சிக்கு வரு வேன். ஏப்ரல் மாதம் துவங்கி ஆகஸ்ட் 20ம் தேதி வரை பனைகளில் இருந்து பதநீர் கிடைக்கும். பதநீரைக் கொண்டு பனங் கற்கண்டு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தத் தொழிலில் நல்ல லாபம் தான். ஆனாலும் தற்போது பனை ஏறுபவர்களும், அதேபோன்று பனங்கற் கண்டு தயாரிப்பு பணியில் ஈடுபடுவோ ரின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. வருங்காலத்தில் இத்தொழில் என்ன ஆகும் என்றே தெரியவில்லை. எனவே, அரசு சார்பில் இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு ஊக்கம் அளித்தால் நிச்சயம் பனைத் தொழிலைப் பாதுகாக்க முடியும்’ என்றார்.
பண்டைய காலம் தொட்டு நாட்டு வைத்தியத்தில் பனங்கற்கண்டு பித்தம், கபம் போக்கும் அருமருந்தாக பயன் படுத்தப்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பசியைத் தூண் டும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளை நீக்கும். பாலில் பனங்கற் கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்பு சளி அகலும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். இதில் இருக்கும் கால்சி யம் பற்களை உறுதிப்படுத்தி, ரத்தக் கசிவைத் தடுத்து, பற்களின் பழுப்பு நிறத்தை மாற்றுகிறது. இதில் இருக்கும் இரும்புச் சத்து பித்தத்தைப் போக்கும் குணமுடையது.
தமிழகத்தில் முன்பு 30 கோடி பனை மரங்கள் இருந்தன. ஆனால், தற்போது 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இதில், தூத்துக் குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் மட்டும் தான் பனைமரங்கள் அதிகளவில் காணப் படுகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பனையேற்றம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரியில் ஆகஸ்ட் மாதம் முதல் மார்ச் வரை பனையேற்றம் செய்யப்படுகிறது. சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை பனையேற்றம் செய்யப்படு கிறது. ஆனால், தூத்துக்குடி மாவட் டத்தில் மட்டும்தான் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கும் பணியில் பெரும்பாலானோர் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பக்கு வத்தில் மற்ற இடங்களில் இல்லாமல் இருப்பதும், உடன்குடி கருப்பட்டி, பனங்கற்கண்டு பிரபலமானதற்கு முக் கிய காரணம் என்று இத்தொழில் ஈடு படுவோர் தெரிவிக்கின்றனர்.
திருக்குறளில் மொத்தமே இரண்டு மரங்கள்தான் இடம் பெற்றுள்ளன. ஒன்று பனை, மற்றொன்று மூங்கில். அறத்துப்பாலில் செய்நன்றி அறிதல் அதிகாரத்தில் 104 வது குறளில், ‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்” ஒருவன் தினை அளவு நன்றி செய்தாலும் அதைச் சிறியது என்று எண்ணாமல் உதவியின் பயனை அறிந்தவர்கள், அதனை பனை அளவு பெரிதாகவே கருதுவர் என்கிறார் அய்யன் வள்ளுவர்.
இதேபோல் காமத்துப்பாலில் நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்தில் 1113வது குறளில், “முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு”
முத்துப்போல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி ! என்று பொருள்பட வள்ளுவர் வர்ணித்துள்ளார்.
மருத்துவ குணம் வாய்ந்த ஒரிஜினல் பனங்கற்கண்டு போன்று போலியாகவும் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒருசிலர் பணத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பனங்கற்கண்டை தயாரித்து வருகின்றனர். ஒரிஜினல் போலவே விற்கப்படும் இந்த போலி பனங்கற்கண்டை பொதுமக்கள் கண்டுபிடிப்பது சிரமம். ஆனாலும், இத்தொழிலில் ஈடுப டுவோர் மட்டுமே போலியை சுலபமாக கண்டுபிடிக்கின்றனர். பதநீரைக் காய்ச்சும் போது பாகு வருகிறது. அந்த பாகு பானையில் 41 நாட்கள் புதைத்து மூடி வைக்கப்படுகிறது. பின்னர் 41 நாட்கள் கழித்து எடுக்கும்போது, பாகு மீது பாலாடை போல் படர்ந்துள்ள பதநீர் ஆடையைச் சேகரிக்கும் சிலர் அதில் சீனி கலந்து போலி பனங்கற்கண்டு தயா ரிக்கின்றனர். இதை தண்ணீரில் கரைத்தால் எளிதில் கரைவதோடு, சுவையும் மணமும் அதிகம் இருக்காது.
புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் பொற்பனைக்கோட்டை என்னும் ஊர் உள்ளது. இங்குள்ள பாழடைந்த கோட்டை 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மரணத்துக்குப் பின் அவ்வையாரின் முயற்சியால் மலைய மான் மகன் தேவகன், பாரியின் மகளிரான அங்கவை மற்றும் சங்கவையை மணம் செய்து கொள்ள சம்மதித்தான். திருமணத்துக்கு வந்த மூவேந்தர்கள் பனம்பழம் வேண்டும் எனக் கேட்டார்களாம். அது பனம்பழத்துக்கான விளைச்சல் காலமில்லை. என்றாலும் விருந்தினர் மனம் கோணாமல் இருக்க அவ்வையார் வெளியே வந்தார். மணப்பந்தல் போட்ட இடத்தில் பந்தலுக்காக வெட்டிப்போட்டு மீதியிருந்த பனைமரத் துண்டத்தைப் பார்த்து, “திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும் மங்கைக் கருகிட வந்து நின்றார் மணப் பந்தலிலே சங்கொக்க வெண்குருத்து ஈன்று, பச்சோலை சலசலத்து, நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து பங்குக்கு மூன்று பழம் தர வேண்டும் பனந்துண்டமே!” என்ற பாடலைப் பாட, பனந்துண்டம் முளைத்து வளர்ந்து உடனே பனம்பழம் தந்ததாம். பனைமரம் வெறும் தாவரம் மட்டும் அல்ல. நம் தமிழர் வாழ்வின் அடையாளம்.
இளம் பனை மரமானது, ‘வடலி’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு பனை மரம் வளர்ந்து, ‘முதிர்ச்சி அடைவதற்கு சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள் ளும். பனை மரங்களில் 34 வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப் பனை, 6. சாற்றுப்பனை,7.ஈச்சம் பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை,11.திப்பிலிப்பனை, 12.உடலற்பனை,13.கிச்சிலிப்பனை, 14.குடைப்பனை, 15.இளம்பனை, 16. கூறைப் பனை, 17.இடுக்குப்பனை,18.தாதம்பனை,19.காந்தம்பனை,20.பாக்குப்பனை,21.ஈரம்பனை,22.சீனப்பனை,23.குண்டுப்பனை,24.அலாம்பனை,25.கொண்டைப் பனை,26.ஏரிலைப்பனை,27.ஏசறுப்பனை,28.காட்டுப்பனை,29.கதலிப்பனை,30.வலியப்பனை,31.வாதப்பனை,32.அலகுப்பனை,33.நிலப்பனை, 34.சனம்பனை.


