நவராத்திரி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் இந்துக்கள் பலரும், வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியை போற்றியும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டின் நவராத்திரி விழா இன்று தொடங்கியது. நவராத்திரி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல கோவில்களில் 9 படிகள் அமைத்து பெருமாள், அம்மன், விநாயகர், முருகன், கிருஷ்ணர், கல்யாண வைபோகம், கலை நிகழ்ச்சி மற்றும் பள்ளிக்கூடம் என விதவிதமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.
நவராத்திரி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. கோவிலில் பக்தர்கள் இந்த கொலு பொம்மைகளை பார்வையிட்டதுடன் வழிபட்டு சென்றனர். மேலும் நவராத்திரி நாட்களில் பெண்கள் வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலன்களும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
குறிப்பாக சுவாமி சிலைகள், கிருஷ்ண லீலா, கருமாரியம்மன், மீனாட்சி அம்மன், திருப்பதி பிரம்மோற்ஸவ சிலை, அர்த்தநாரீஸ்வரர், சங்கர நாராயணன், அழகர் சுவாமி, தலைவர்கள், தியாகிகள் சிலைகள், பறவைகள் மற்றும் விலங்கு பொம்மைகள், ஆண்டாள், குபேரர் என பல்வேறு விதமான பொம்மைகள் வைத்து தினந்தோறும் பூஜை செய்து வருகின்றனர்.


