தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வசவப்பபுரத்தில் அமைந்துள்ளது மூர்த்தி விநாயகர் திருக்கோவில். இந்த கோவில் நீண்ட நாட்களாக புணரமைக்கப்படாமல் இருந்து வந்தது.
தற்போது ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூஜைகள் நடந்து வருகிறது. மேலும் பரம்பரை வழி சாரா அறங்காவலர்களால் தற்போது இந்த கோவில் நிர்வாகம் நடந்து வருகிறது. மேலும் கடந்த 2021&22ம் ஆண்டு கிராமப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் இந்த கோவில் திருப்பணிகள் நடந்து வந்தது.
திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மூர்த்தி விநாயகர் கோவிலில் 50 வருடங்களுக்கு பின்னர் குடமுழுக்கு நடந்தது.
இதற்காக அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து கோவில் முன்பு மகா யாகசாலை பூஜை, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூர்த்தி விநாயகர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், உதவிக்கோட்டப் பொறியாளர் சாத்தையன், மேலாளர் ரோகிணி, சரக ஆய்வாளர் நம்பி, அறங்காவலர் முத்துசாமி, பூசாரி முருகன், திருக்கோயில் பணியாளர் விஸ்வநாத், சுப்பையா மற்றும் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


