தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா கொங்கராயகுறிச்சி மிகப்பெரிய புதை நகரமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள விநாயகர் கோயில் கல்வெட்டு ராஜராஜ சோழனின் கட்டுபாட்டுக்குள் இருந்த சிற்றரசன் ஆண்டதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் வரலாற்று ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜோசப்ராஜ். இவர் கொங்கராயகுறிச்சி சட்டநாதர் கோயில் மற்றும் இங்குள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்துள்ளார். இதற்காக அவரது மாணவர் விக்னேஷ் துணையாக இருந்துள்ளார். அந்த ஆய்வில் ராஜராஜ சோழன் ஆட்சியின் கீழ் கொங்கராயகுறிச்சி இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த கோயிலை பற்றி முனைவர் ஜோசப்ராஜ் கூறும்போது,
கோடைக்காலம் தவிர பிற மாதங்களில் தாமிரபரணி ஆறு கரைபுரண்டு பாய்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் சுமார் பத்துமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1869 நவம்பர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாளையங்கோட்டையையும், திருநெல்வேலியையும் இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலம் பாதிப்புக்குள்ளானது. இதில் 4 வளைவுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் பக்கிள்துரை தான் அதை சீரமைத்தார். பின்னர் 1877ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. கொங்கராயகுறிச்சியில் அழிந்த இடங்களில் கிறிஸ்தவ பிரசங்கியார் ரேணியஸ் அவர்கள் புதிய குடியிருப்பையும் புதிய ஆலயத்தினையும் எழுப்பியுள்ளார்.
இக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட தாமிரபரணி வெள்ளத்தால் கொங்கராயகுறிச்சி ஸ்ரீவீரபாண்டிஸ்வரர் கோயில் முழுவதும் ஆற்றுமணலால் மூடப்பட்டு விட்டது. கோவிலில் தேர் இருந்ததாகவும், அது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் செவிவழி செய்தியும் இந்த பகுதி மக்கள் பேசி வருகிறார்கள். 21-ஆம் நூற்றாண்டில் கிராம மக்களின் முயற்சியினால் மணல் அகற்றப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

11 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் ஆட்சியில் அவர்களுக்கு கீழ்பட்ட சிற்றரசர் பலர் இருந்தனர். கொங்குராயன் என்ற சிற்றரசன் ஸ்ரீவைகுண்டம் பகுதியை கண்காணித்து வந்ததாகத் தெரிகிறது. ஆகவே, கொங்குராயகுறிச்சி கொங்குராயர் பெயரை நினைவூட்டும் விதமாக உள்ளது. குறிச்சி என்பது மலைவாழ் மக்கள் வசித்த பகுதியை குறிப்பிடுவதாக இருந்தது. குறிஞ்சி நிலத்தில் வசித்த மக்கள் என்பதால் குறிஞ்சி என்பதில் இருந்து குறிச்சி என மருவியுள்ளது. அருகில் உள்ள மணக்கரை சிவன் கோயிலிலும் கொங்குராயனின் பெயரில் கல்வெட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் கொண்ட ஊர் கொங்குராயகுறிச்சி என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளது.

இங்குள்ள வீரபாண்டீஸ்வரர் திருக்கோயிலின் மொத்த பரப்பளவு சுமார் 3 ஏக்கர் ஆகும். தென்பாண்டி நாட்டுக்குப் பெருந்தொண்டு செய்த பாண்டியன் ஸ்ரீவல்லபன் ஆவார். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மணப்படைவீடு அம்மன்னனுக்குரிய படைவீடுகளில் ஒன்றாக இருந்துள்ளது. ஜடாவர்மன் அல்லது சடையவர்மன் ஸ்ரீவல்லபன் கி.பி.1070-ல் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசனாக முடிசூடிக் கொண்ட முதலாம் குலோத்துங்க சோழனின் சமகாலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த மன்னராவார்.
முதலாம் இராஜராஜ சோழன் (கி.பி. 985&1014) காலத்தில் பாண்டியநாடு சோழர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆத்து£ர் பகுதி ‘ராஜராஜ சோழ வளநாடு’ என்று சோமநாதர் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.” முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் மதுரை, திருநெல்வேலி பகுதியில் சோழ பாண்டிய வைசிராய்கள் நியமிக்கப்பட்டனர். பெருங்குளம் திருவழுதீஸ்வரர் கோயிலிலும் ராஜராஜ சோழனின் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.” இதே கோவிலில் சடையவர்மன் ஸ்ரீவல்லபனின் மெய்க்கீர்த்தியும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் தான் கொங்கராயகுறிச்சி ஸ்ரீவீரபாண்டீஸ்வரர் கோயில் எழுப்பப்பட்டு அதில் சடையவர்மன் ஸ்ரீவல்லபனின் மெய்க்கீர்த்தி கல்வெட்டாக உள்ளது.
வீரபாண்டீஸ்வரர் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் தெளிவாக காணப்படுகிறது. கருவறை நிலையின் மேற்பகுதியில் இரண்டு வரிகள் கொண்ட கல்வெட்டு ஒன்றும், கருவறையின் இடது நிலைப்பகுதியில் 16 வரிகள் கொண்ட ஸ்ரீவல்லப பாண்டிய மன்னனின் மெய்க்கீர்த்தியும் பொறிக்கப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புற பகுதியில் கல்வெட்டுகள் இருந்துள்ளது அவை வெள்ளப்பெருக்கினால் கருவறை முழுதும் மணலால் மூடி இருந்துள்ளது. ஆகவே எழுத்துக்கள் சிதைந்து விட்டது.

17-ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர். நாயக்க மன்னர்கள் தென்பாண்டி நாட்டில் ஏராளமான கோயில்களில் திருப்பணிகள் செய்துள்ளதை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. வீரபாண்டீஸ்வரர் கோயிலில் மகாமண்டபம் மற்றும் சுற்றுப்புற மண்டபங்களைக் கட்டி அதில் உள்ள தூண்களில் நாயக்க மன்னர்களின் உருவத்தை சிற்பமாக செதுக்கியுள்ளனர். இதனால் 17-ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் சிறப்பு பெற்று விளங்கியதை அறிய முடிகிறது. நாயக்க மன்னர்கள் இக்கோயிலுக்குத் தானங்களும் வழங்கியுள்ளனர்.
கொல்லம் ஆண்டு 872 (கி.பி.1696)ல் ஸ்ரீவீரபாண்டீஸ்வரர் கோயிலுக்கு நாயக்க மன்னர்கள் தானம் வழங்கிய செய்தி செப்பு பட்டயம் மூலம் அறிய முடிகிறது. 1810-ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் கொங்கராயகுறிச்சி வீரபாண்டீஸ்வரர் கோயிலுக்கு சுப்பிரமணிய பிள்ளை குமாரன் மாணிக்கம்பிள்ளை என்பவர் ஒரு வெண்கல மணியை உபயமாக வழங்கியுள்ளார்.
கொங்கராயகுறிச்சியின் பழமையான வரலாற்றுக்கு ஆதாரமாக உள்ள கோயில் வலம்புரி விநாயகர் கோயிலாகும். வீரபாண்டீஸ்வரர் கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் சுமார் 200 அடி துரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் நுழைவாயில் நிலைப் பகுதியில் 9 ஆம் நூற்றாண்டு மற்றும் 11-ஆம் நூற்றாண்டை சார்ந்த இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுக்கள் காணப்படுகிறது. வீரபாண்டீசுவரர் கோயில் கட்டப்படுவதற்கு முன்பு வலம்புரி விநாயகர் கோயில்தான் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த முதன்மை கோயிலாக இருந்து வந்துள்ளது. 9-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னனின் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று உள்ளது. மற்றொரு கல்வெட்டு 11-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. இது இராஜராஜ சோழனின் காந்தளுர் சாலை போர் வெற்றியைக் குறிப்பிடுகிறது.” வலம்புரி விநாயகர் கோயிலின் கருவறையின் மீது விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விமானம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாக காணப்படுகிறது. கருவறை மற்றும் அர்த்த மண்டபத்துடன் கூடிய சிறிய கோயிலாகக் காட்சியளிக்கிறது. சுமார் 20 அடி நீளமும். 9 அடி அகலமும் கொண்டதாக காணப்படுகிறது. இக்கோவில் தரைதளத்திற்கும் மேலாக ஆற்றுமணல் சூழ்ந்து காணப்படுகிறது. கருவறையைச் சுற்றியுள்ள ஆற்றுமணலை அகற்றினால் அதில் பல்வேறு கல்வெட்டுகள் இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

என்று அவர் கூறினார்.
கொங்கராயகுறிச்சியை பொறுத்தவரை தொல்லியல் ஆதாரங்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. ஆதிச்சநல்லூர் பறம்பில் காணப்படும் பானையோடுகளைப் போன்று கொங்கராயகுறிச்சியிலும் ஆற்று மணலில் பானையோடுகள் புதைந்து காணப்படுகிறது. எனவே இப்பகுதியில் முறையான களஆய்வு மற்றும் அகழாய்வு மேற்கொண்டால் இவ்வூரின் சிறப்பை மேலும் வெளிக்கொண்டு வரலாம். வரலாற்று சிறப்பு மிக்க ஊராக விளங்கிய இந்த ஊரின் சிறப்பை உலகிற்கு அறிய செய்யலாம்.



