போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் தீய விளைவுகள் குறித்து இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தத் தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 26 அன்று விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் “START RUN, STOP DRUGS – ANTI DRUG RUN 2026” மாரத்தான் போட்டி 26.06.2026 அன்று நடத்தப்படவுள்ளது. இந்த மாரத்தான் போட்டியானது ஜூன் 26 அன்று காலை 6:30 மணிக்குத் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்திலிருந்து தொடங்கப்படும். போட்டியில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் அன்று காலை 6:30 மணிக்கு முன்னதாக மாவட்ட விளையாட்டரங்கத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.
இப்போட்டியில் 14 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பாளர்கள் மொத்தம் 5 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் டி-சர்ட் வழங்கப்படும். மாரத்தான் போட்டியானது மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரயில்வே கேட் வரை சென்று, மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டரங்கத்தை வந்தடையும்.
போட்டியின் போது நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்குபெறும் போட்டியாளர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு பயனடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.


