எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 7 மாதக் கைக்குழந்தை ஒன்றின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்த நான்கு மணி நேரத்திற்குள் உறவுமுறை சான்று வழங்கிய வட்டாட்சியருக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 மாதக் கைக்குழந்தை ஒன்றிற்கு நிலவிய கல்லீரல் பிரச்சினை காரணமாகக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யச் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றை அதன் பெற்றோர் அணுகியுள்ளனர். அப்போது, அறுவை சிகிச்சைக்குச் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் இருந்து உறவுமுறை சான்று பெற்று வருமாறு மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சமூக வலைத்தளம் மூலமாகக் கோவில்பட்டியைச் சேர்ந்த கரு.இராஜசேகரனைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர் சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபுவுடன் இணைந்து எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வட்டாட்சியர் சுபாவைச் சந்தித்துக் குழந்தையின் அவசர நிலையை விளக்கியுள்ளனர்.
மனுவின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட வட்டாட்சியர் சுபா, எவ்வித காலதாமதமும் இன்றி சோழபுரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாகச் சான்று கிடைக்கப் பரிந்துரை செய்தார். அதன் பேரில் சோழபுரம் வருவாய் ஆய்வாளர் மற்றும் சண்முகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்து வட்டாட்சியரிடம் சமர்ப்பித்தனர்.
அறிக்கை வந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர் அலுவலகத்தில் இல்லாத நிலையிலும், மாற்று ஏற்பாடாக வேறொரு பிரிவு அலுவலரைத் தொடர்பு கொண்டு உடனடியாக உறவுமுறை சான்றைத் தட்டச்சு செய்ய வட்டாட்சியர் உத்தரவிட்டார். இதன் மூலம், மாலை அலுவலக நேரம் முடியும் முன்பாக, விண்ணப்பித்த நான்கு மணி நேரத்திற்குள் உரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.
வருவாய்த்துறையில் சான்றிதழ்கள் பெறப் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் சூழலில், குழந்தையின் மருத்துவ அவசரத்தை உணர்ந்து மனிதநேயத்துடன் துரிதமாகச் செயலாற்றிய எட்டயபுரம் வட்டாட்சியர் சுபாவின் இந்தச் சேவைக்குப் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


