தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் இன்று பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதி பெய்த அதிகனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் கோரம்பள்ளம் குளத்திலும் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தின் தண்ணீர் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள பாலம் வழியாக பாய்ந்து ஓடியது. மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்து பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், நிகிலேசன் நகர், புஷ்பாநகர், கதிர்வேல் நகர், ராஜீவ்நகர், தபால் தந்தி காலனி, ஸ்டேட் வங்கி காலனி, இந்திராநகர், போல்டன்புரம், கால்டுவெல் காலனி, கோயில்பிள்ளை நகர், தெர்மல்நகர், தாளமுத்துநகர் வண்ணார் பேட்டை, டி.சவேரியார்புரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி, முத்துகிருஷ்ணாபுரம், சாமுவேல் புரம், பூபாலராயர்புரம் மற்றும் திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி இருக்கும் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று பார்வையிட்டார்.


