தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
மணப்பாடு பகுதியில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்துள்ள மணல் குன்றின் மீது அமைந்திருப்பது திருச்சிலுவை நாதர் ஆலயம். இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட உண்மையான திருச்சிலுவையின் சிறிய பகுதி இந்த ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 5.45 மணிக்கு புனித யாகப்பர் ஆலயத்தில் அருள்தந்தை சகாயம் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு மணல் குன்றின் மீதுள்ள திருச்சிலுவை நாதர் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து பெருவிழா கொடியேற்றமும் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வில் பங்குத்தந்தையர் கிராசிஸ் மைக்கேல், அருள்தந்தையர்கள் மைக்கேல், கிங்ஸ்லி கிராண்டின் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வருகை தந்த திரளான இறைமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
விழா நிகழ்ச்சிகள் விவரம்:
இன்று (செப். 5, சனிக்கிழமை) முதல் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி வரை தினமும் காலை 6.30 மணிக்குச் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறவுள்ளன.
செப்டம்பர் 12: காலை 7.15 மணிக்கு திவ்ய ஐந்து திருக்காய சபையின் தேர்வுக்குழு நியமனம் மற்றும் மெய்யான திருச்சிலுவை பவனி நடைபெறுகிறது.
செப்டம்பர் 13: மாலை 4.30 மணிக்கு மலையாளத் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மகிமை பெருவிழா மாலை ஆராதனையும் நடைபெறும். இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
செப்டம்பர் 14 (பெருவிழா நாள்): அதிகாலை 4 மணி முதல் தமிழ் மற்றும் மலையாளத்தில் திருப்பலிகள் நடைபெறும். காலை 6 மணிக்குத் திருச்சிலுவை நாதர் ஆலயத்தைச் சுற்றி ஐந்து திருக்காய சபையினரின் பவனியும், அதைத் தொடர்ந்து ஆயர் தலைமையில் சிறப்புத் திருப்பலியும் நடைபெறும். பகல் 11 மணிக்குத் திருப்பலி, மாலை 4 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல் நிகழ்வுகள் நடைபெறும். மாலை 5.30 மணிக்குக் கொடியிறக்கம் செய்யப்பட்டு நன்றித் திருப்பலி செலுத்தப்படும்.
செப்டம்பர் 15: காலை 5.30 மணிக்குச் சிறப்புத் திருப்பலியுடன் விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை மற்றும் பங்கு கமிட்டியினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.


